வளரும் பிள்ளை
ரமேஷ் காலேஜிலிருந்து வரும்போதே "அம்மா ரொம்ப பசிக்கிறது, தட்டு வைம்மா" என்றபடியே உள்ளே நுழைந்தான். அம்மாவிற்கு ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருந்தது. முழுநாளோ அரைநாளோ, காலேஜிற்கு டிஃபன் பாக்ஸ் எடுத்துச் செல்கிறான். இன்று இரண்டு மணிக்கு வந்துவிட்டான். டிஃபன் பாக்ஸும் காலி.
இவன் காலேஜ் சேர்ந்ததிலிருந்துதான் இப்படி. வளருகிற பிள்ளைதான் என்றாலும் நாஸூக்காக கேட்டுவிட்டாள். "நாளையிலிருந்து பெரிய பாக்ஸ் வைக்கட்டுமா? ஒரு மணிக்கு சாப்பிட்டும் இரண்டு மணிக்கே பசிக்கிறதே" என்று. "வேண்டாம்மா. ஒருத்தர் சாப்பிட இது போதும். எங்கூட படிக்கிற பையன் கிராமத்திலிருந்து வந்து ஹாஸ்டலில் தங்கிப்படிக்கிறான். வசதி குறைவு. ஒரு மாதத்திற்கு இருபது லன்ச் டோக்கந்தான் வாங்குவான். மீதி நாட்களில் பழம் பிஸ்கட் என்று கழிப்பான். பாவம்மா. அதனால் அரைநாள் காலேஜ் என்றால் என் லன்சை அவனுக்குக் கொடுத்துவிட்டு நான் வீட்டில் வந்து சாப்பிடுகிறேன். சாப்பிட லேட்டானாலும் நான் பட்டினி கிடப்பதில்லையே!". அம்மாவிற்கு கண்ணில் நீர் துளிர்த்தது.