துக்கையாண்டி

துக்கையாண்டி உசிரு
தொண்டைக்கும்,
நெஞ்சுக்குமா
ஓடிகிட்டிருக்கு
தொளசித்தண்ணி குடுத்து
வழியனுப்பி வக்கிறதுக்கு
அவரு பொண்டாட்டிக்கு
கொடுப்பினை இல்ல
அது போன வருசமே
போய்ச் சேந்துருச்சு
பாவம் மனுசன்
ஒண்டிக்கட்டையா
வண்டிய ஓட்டுனாரு
"வசதியான
மனுசனாச்சே
அவரு ஏன் வண்டி
ஓட்டி பொழக்கணும்"னு
நெனைப்பீக
எங்க பக்கம்
வாழ்க்கைய
வண்டின்னுதான்
சொல்லுவோம்!
எறக்கமா இருந்தா
வண்டி எலகுவா ஓடும்
ஏத்தமா இருந்தா
தெணறி ஏறும்
சில வேளை....
நொடிகள்ல
விழுந்து எந்திரிக்கும்
கடைசியா ஒரு நாளு
அச்சு முறிஞ்சு
ஆகாம போயி
அடுப்புக்கு வெறகாகி
அடுப்புக்கரியாகிவிடும்
அது மாதிரிதானப்பு
வாழ்க்கையும்
சரி.... அதை விடுங்க
மூனு ஆம்பளைப்
புள்ளையப் பெத்தும்
இன்னக்கி
துக்கையாண்டி
துக்க ஆண்டியா
தாங்கிப் புடிக்கிறதுக்கு
தொண உசிரு இல்லாம,
நாலு சுவத்துக்குள்ள
நட்டாந்து கெடக்காருன்னா
படிப்பால வந்த வென....
மூத்த பய முருகேசன
வாயில நுழையாத
அளவுக்கு
பெரிய படிப்பு
படிக்க வச்சாரு
பொண்டாட்டி, புள்ளையோட
சகதிஅரேபியாவுல
(ஓ..சவுதி)
இருக்கான்!
நடுப்பய சந்திரன
கறுப்புச் சட்டை
போட்டுக்கிட்டு
நியாயம் பேசுற படிப்பு
படிக்க வச்சாரு
கூடப் படிச்ச புள்ளய
கட்டிக்கிட்டு
இந்திராகாந்தி ஊருல
(டெல்லி...?)
கோர்ட்டில
சட்டம் பேசுறானாம்
பெருத்த வருமானமாம்!
ஆனா,
பெத்தவனத்தான் பாக்கல
கடைசிப் பய மாணிக்கத்த
கணக்கு பாக்குற படிப்பு
படிக்க வச்சாரு
அவனும் மலேசியாவுல
ஆடிக்கிட்டு இருக்கானாம்
(ஓ... ஆடிட்டரு)
அஞ்சு வருசத்துக்கு
ஒரு வாட்டி
எங்க மானாவரி சீமைக்கு
வந்து போற
பொயல்கணக்கா
மூனு பேரும் வந்து
போவானுங்க....
தளர்ற காலத்துல
தாங்கிப்
புடிக்க வேண்டிய
பயலுக மூனு பேரும்
தெசைக்கு
ஒரு பக்கமா
காசு பாக்கப் போனதால.....
அவனுகள
நெனச்சி, நெனச்சி
துக்கையாண்டிக்கு
பாச நோய் ஒரு பக்கம்
அவர படுத்தி எடுக்கிற
காச நோய் மறு பக்கம்
மனசுக்கு
செரமமா இருக்கு
சரி.... தந்தி கொடுத்து
பயலுகள வரவக்கலாம்னா
மனுசன் பிடிவாதமா
சொல்லிப்புட்டாரு
அப்பன்கிற உணர்வு
அவனுங்களுக்கு
இல்லாமப் போச்சேய்யா!
என் விந்துக்குப்
பொறந்ததுகளுக்கு
தந்தி கொடுத்துதான்
வந்து பார்ப்பானுகளா?
வேணாமப்பா -
'ஊருசனம் கூடி
கொள்ளி வச்சா
போதும்'னு
புடிவாதமா நின்னவரு
ஒரு வழியா
போய்ச் சேர....
அவரு சொன்னபடியே
காரியம் எல்லாத்தையும்
ஊரே இருந்து முடிக்க
ஒரு மாசம் கழிச்சு
மூனு பயலுகளும்
ப்ளசருல வந்து
பொதைகுழியில
மாலையப் போட்டு
கும்புட்டுட்டு
இருந்த
சொத்துக்கள
மூனா பிரிச்சு
காசாக்கிக்கிட்டு
காரு ஏறிட்டான்ங்க!
அதுல இருந்து
எங்க ஊருல
படிப்பு மேல
சனங்களுக்கு
ஒரு பிடிப்பு
இல்லாம போச்சு!
'கூட' படிக்க வச்சா....
'கூட' இருக்காம
ஏடாகூடமா எங்காவது
ஓடிப்போயிடுவான்ங்க
அதனால,
அளவா படிக்க
வச்சாதான்
அருகில இருப்பாங்க...
படிப்பு காசு பாக்க
கத்துத் தர்ற அளவுக்கு
பாசம் பாக்க
சொல்லித் தர்றதில்ல
உலகத்த புரிஞ்சுக்கற
அளவுக்கு படிச்சா போதும்
உறவுகளைப் பிரியிற
அளவுக்கு வேணாம்னு
அன்னைலருந்து
எங்க ஊரே ஒண்ணுகூடி
ஒரு முடிவுக்கு
வந்துருச்சு!
(முடிவுகள் சில
மூட நம்பிக்கைகளாகுவது
வாழ்க்கை நடப்புகளிலிருந்தே
பெறப்படும் காயங்களால்தானே!
இது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மூடத்தனம்!
வலியை எதிர்கொண்டவர்களுக்கு இது நிவாரணம்!)

எழுதியவர் : அபிநயா (17-Dec-13, 1:00 pm)
பார்வை : 141

மேலே