கவிமழை
அம்மன் கோவில் திருவிழா
கோவில் வெளி வீதியில்
மேடை போட்டு கலை நிகழ்ச்சி.
அலைகடலென திரண்டது
பார்வையாளர் கூட்டம்.
பிரத்தியேகமாக ஒதுக்கப் பட்ட
முன்னிருக்கைகளை
நிரப்பிக் கொண்டன
கிராமத்துப் பெரிய தலைகள்.
ஒலிவாங்கியை கையில் வாங்கிய
அறிவிப்பாளர் உச்சஸ்தாயியில்
"பார்வையாளர்களே!அடுத்து
மேடையில் கவிமழை
பொழிய உள்ளது
அமைதி காத்து இருங்கள்" -என்றார்.
அதை உள்வாங்கிய கணத்தில்
முளைக்கத்தொடங்கினகுடைகள்
கூட்டத்தின் முன் வரிசையில்!
பின்னால் இருந்தவர்களுக்கு
எதுவும் புரியவில்லை.
"ஏதுங்க சாமி குடை எல்லாம் எதுக்கு"
ஆதங்கத்தில் வினவ.
"சும்மாவே நமக்கு ஜலதோஷம்
அதுக்குள்ள இந்த
கவிமழை காரமழை அமிலமழை
எல்லாம் பெஞ்சா நாளைக்கு
நியூமோனியாதான்!
துண்டு துணி இருந்தா
நீங்களும் தலைக்கு போத்திக்குங்க"
அடுத்த கணமே கூட்டமே குடையாய் மாற
நனைய யாருமின்றி கவி மழை பெய்து கொண்டிருந்தது!