என்னை தொந்தரவு செய்யாதீர்கள்

காடு அழிப்புக்கு எதிராக
கருத்து சொல்ல
எனகென்ன கற்பு இருக்கிறது ?
நான் அருந்தும்
ஒவ்வொரு கோப்பை தேநீருக்கு பின்
வனம் அழித்திட்ட வரலாறு உள்ளது.

தாமிரபரணி குருதி நிறைத்த
குளிர்பானம் குடிக்கும் எனக்கு....
என்ன தகுதி இருக்கிறது
தண்ணீர் கோரிய போராட்டத்தில்
தலைமை ஏற்க ?

குவியல் குவியலாக
என் வீட்டு கழிவறை குழாய்கள்
ஆற்றுக்குள்
மலம் கக்குகிறபோது.......
நாசமாய் போகும் நதிகளை
தடுக்க சொல்ல
எனகென்ன தரம் இருக்கிறது?

நான் உட்கொள்ளும் அத்தனை
ஆங்கில மருந்துக்கு பின்னும்
குரங்கு, எலி, நாய் போன்ற
பல்லுயிரிய சிதைவு இருக்கிறது
குருவி இனம் அழிகிறதாம்...
குரல் கொடுக்க சொல்லுகிறீர்கள்
அலைபேசியில் குலாவும் என்னை ?

சுற்றுலாவில்
நான் உடைத்து வீசிய
மது குப்பி சில்
காட்டுயிர் கால் கிழிக்கிறபோது
"காட்டுக்குள் ஆயுதங்களை
தடை செய்யயுங்கள்" என்று வலியுறுத்த
எனக்கென்ன அறம் இருக்கிறது ?

என் துரித உணவு பழக்கம்
தூக்கில் போட்டது உழவனை...
எனகென்ன துப்பிருக்கிறது
விவசாயிகளுக்காக துணிந்தெழ?

குளிரூட்டும் கருவி பொருத்திய
அறையில் உறங்குகிற எனக்கு
புரிதல் என்ன இருக்கிறது
புவி வெப்பமயமாதல் குறித்து
புதிய கட்டுரை எழுத ?

தயவு செய்து
என்னை தொந்தரவு செய்யாதீர்கள்
சுற்றுச்சூழல் அழிவுக்கும்
எனக்கும்
எந்த தொடர்பும் இல்லை.


---- தமிழ்தாசன் -----

எழுதியவர் : தமிழ்தாசன் (18-Dec-13, 1:59 pm)
பார்வை : 213

மேலே