ஏதிலி

அழகான ஊர் திருபொதிகையூர்
அது எங்கள் ஊர்.
குளம் , குட்டை , பல்வகை மரங்கள் ,
சிறு சிறு குடில்கள், அதற்கு முற்றம்,
பெற்றம், நாற்று நடும் வயல்,
கிணறு , தோட்டம். அன்புடன் தென்னம்பிள்ளை ஐந்து,
புன்செயில் இரண்டு பனைமரங்கள்,
பாசி , உளுந்து என பருப்புகள் ,
மக்கா, கம்பு என்ற சோள வகைகள்.
பருத்தி ஆமணக்கு ... மாமரமும் ,
வாழையும் , மாதுளமும் ஒவ்வொன்று .
என எங்களுக்காக எங்களுடன் வாழ்ந்தது.

கிழக்கே, உதிக்கும் கதிரவனை அரை நாழிகை பொழுது மறைக்க முற்படும் ஒரு மலை குன்று.
மாதம் மும்மாரி பெய்ய,
ஏர் கொண்டு உழுது உழைக்க.
கடும் உழைப்பில் செழிக்க,
இல்லாதவர்க்கு வாரி கொடுத்தே
சீராக வாழ்ந்து வந்தோம்.

பசுமையான ஊர்,
பாசம் கொட்டும் தாய்,
பண்பு சொல்லும் தந்தை,
அன்பு காட்டும் அக்கா ,
நேசம் வளர்த்த நண்பர்கள்,
கதை சொல்லும் ஆயி என்றே
பிறந்த மண்ணில் தமிழினிற்கினியன் ஆக
ஏழு வயது வரை வாழ்ந்து வந்தேன் .

தந்தை வன்னியரசு, தாய் இசைப்பிரியா,
அக்கா தமிழினி ஆயி சண்முகவடிவு
என்று நாங்கள் வாழ்ந்து வந்த குடும்பம்
ஓர் மாலை பொழுது , பள்ளிக்கூடம்
முடிந்து வந்ததும் இல்லத்தின் முற்றத்தில்
நானும் அக்காவும் ஆயிடம் கதை
பேசிக் கொண்டிருந்தோம் ... அம்மா
இராச்சோறு ஆக்கி கொண்டும் , தந்தை
பெற்றத்தை குளிப்பாட்டிகொண்டும் இருந்தோம்.

திடீரென சமருக்கு வரும்
வானூர்திகள் குண்டுமழை பொழிய ,
எங்கள் தோட்டம் கண் முன்னே அழிந்தது.
மறுமுறை திரும்ப வருவதற்குள்
பதுங்குகுழியை தேடி ஓடினோம் எல்லாரும்.

மறுமுறை வந்த வானூர்திகள் - ஆம்
இரண்டு ... ஊரில் ஒரு வீட்டையும் விடாது
அழித்தது - சிதறி கதறி ஓடினோம் .
குற்றுயிராய்... நாங்கள் மட்டும் அல்ல
எங்கள் மண்ணும் வீடும் ஊரும்.

குண்டுகள் வந்து விழுந்த அடுத்த
நாழிகை பொழுது நாங்களும் வீழ்ந்தோம்.
நிலை குலைந்தோம் எங்கள் நிலம் இழந்தோம்
எங்கள் உறவுகள் பலரை இழந்தோம்.
என்னில் நேசம் வளர்த்த நண்பர்கள்
சிலரும் அவற்றில் அடங்கும்.
கனவில்லை, காலிவூட் படமில்லை மெய்யே,

பதுங்கு குழிகள் பாடம் சொன்னது எங்களுக்கு,
மக்களே இன்னும் ஒரு நாள் கூட இங்கு இராதீர்கள்.
எங்கோ சென்று உயிர் பிழைத்து கொள்ளுங்கள்.
உங்கள் உறவுகளை இழந்தது போதும்,
உடல் உறுப்பிழந்து ஊனமானது போதும்.
இங்கு சுகமுடன் வாழ்ந்தது போதும்
நலமுடன் வாழ எங்காவது புறப்படுங்கள்,

வீற்றிருந்த இல்லம் காணோம்,
வாழ்ந்த ஊரே காணோம் ,
தோட்டம் துரவுகள் காணோம் ,
தென்னம் பிள்ளைகள் காணோம் ,
மா வாழை காணோம்,
பனை மரங்கள் கருகின,

நாங்கள் உயிருக்கு உயிராக
கண்ணும் கருத்துமாய் வளர்த்த
ஓர் அறிவு உயிர்கள்
செத்தே அழிந்தது கண்டோம்,
நிலங்கள் அழிந்தது, ஊரும் உருக்குலைந்தது .

ஐந்து சிவன் கோயில்கள் இடிக்கப்பட்டது,
கிருத்துவ ஏசு தேவாலையங்கள் தகர்க்கப்பட்டது.
எல்லாம் படைவீரர்கள் போட்ட குண்டுகளில்
தரை மட்டம் ஆனது கண்டோம்.
தாமதியாதீர் புறப்படுங்கள் இவ்விடத்தி நின்று

தாய்மண் சொன்ன அறிவுரைகள்
என் தந்தைக்கு எட்டியது ,
வானூர்திகள் குண்டுகள் நிரப்ப
சென்ற அரைநாழிகை இடைவெளியில்
எங்கள் தந்தை எரிந்து
மீதியாகி இருந்த மனை கண்டு
குமுறி அழ நேரமில்லை, வானூர்தி
குண்டுகள் நிரப்பி திரும்புமோ என்ற அச்சம்.

உடுப்புகள் எல்லாம் எரிந்தது
அம்மா ஆக்கிய சோறு
அடுப்பிலேயே அணைந்தது ,
எங்கள் பாட நூல்கள் ,
நாங்கள் சேர்த்த உண்டியல்- என்று
எரியாத பொருளே இல்லை

எரிந்தும் எரியாத தகரப்பெட்டி தவிர,
அதில் தாய் தந்தை திருமணநாள்
திருமண உடுப்புகள், புகைப்படங்கள் மீதியாக,
கடைசி ஆண்டு வரவாக - எங்கள் நிலம்
ஈந்த ஒரு நூறாயிரம் காசு மட்டும்.
அழகோவிய இல்லம் தழலில் கருகியதே.

கண்ணீர்த்துளிகள் என்றால் என்னவென்று
தெரியாது வளர்ந்த நாங்கள்,
என் தந்தை அழுவது கண்டு
தாயும் அழுதார் எல்லோரும் அழுதோம்.
புறப்படத் துணிந்தோம் - கண்ணீர் கொப்பளிக்க,
திரும்பிப் பாராது - அழுத விழிகளோடு.

ஓடினோம் எங்கள் ஊரைவிட்டு
நாங்கள் பிறந்த மண்விட்டு
நாடி இருந்த நாட்டைவிட்டு
போகும் வழியிலே நெஞ்சைப்
பதற வைக்கும் மாந்தப்
பேரழிவு கண்டோம் வெந்தோம்.

வெந்து நெருடலில் நொந்தோம்.
பேருந்துக்கு நின்றிருந்த பள்ளி
ஆசிரிய ஆசிரியை சிறியோர் பெரியோர்
என்று பாராது உடல் சிதறி
செத்து கிடந்தனர், பார்க்க இயலாது
கண்களை மூடிக்கொண்டோம். நானும், அக்காவும்.

எங்கள் ஊரை இலங்கை படையணி
கைப்பற்றியது ... உலகுக்கு உரைத்த
இலங்கை வானொலி செய்திகள் - ஒளிபரப்பியது.
கேட்டோம் எங்களுடன் வருபவர்களின் வானொலி பெட்டியில்.
ஏதேதோ வண்டி பிடித்து நகர்ந்தோம்
எங்கள் ஊர்விட்டு நாட்டைவிட்டு உயிருக்காகவே .

இலங்கையின் வடமேற்கு கடற்கரை .
நள்ளிரவு செல்ல சில நாழிகைகள்.
எங்களுடன் வந்தவர்கள் கூட்டமாக
மீன்பிடி படகு என்று கள்ளத்தோணியில்.
அலைகளின் ஆர்ப்பரிப்புடன் உப்புக்காற்று புடைசூழ
கடல் வழிப்பயணம் தொடர்ந்தோம் நாங்கள்.

தமிழகத்தின் தனசுகோடியில், அதோ விளக்கு
தெரிவது தமிழகமென்று ... எல்லோரும் இறக்கப்பட்டோம்.
எங்களிடம் இருந்த நூறாயிரம் காசை
பிடுங்கி கொண்டு திரும்பினான் படகோட்டி.
முட்டு நனைய கடல்நீரில் நடந்தோம்.
கை கோர்த்துக்கொண்டு ஏதுமில்லா ஏதிலிகளாய்.

தமிழ்நாடு கடற்கரையில் ஒதுங்கிய நாங்கள்
ஒளிவிளக்கு தெரிந்தது - மீனவ குடியிருப்பு.
குளிரில் நடுங்கியபடி ஒரு வீட்டுக் கதவை
தட்ட அவர்கள் தந்த உபசரிப்பு
எங்கள் துன்பமெல்லாம் கனவென மறந்தோம்.
எங்களை தமிழகம் கட்டியணைத்து வரவேற்றது.
காலையில் அகதி முகாம் அனுப்பப்பட்டோம்,
எல்லாம் இருந்த நாங்கள் ஏதுமில்லாது .
எங்களுகென்று ஒரு குடியிருப்பு பகுதி,
அதே செடிகள் கொடிகள் மரங்கள்.
ஆனால் நிலமும் கோயில்களும் இல்லை.
ஆயி மட்டும் இறந்துவிட்டார் வருத்தப்பட்டே.

நாங்கள் தமிழகத்தில் நலமுடன் உள்ளோம்
படித்த மேதையாய் அறிவுடன் உள்ளோம்
பொன்பணம் கொண்டு செழிப்புடன் உள்ளோம் .
நாங்கள் உறவுகளை உருவாக்கிக் கொண்டோம்.
நாங்கள் முதலில் வாழ்ந்த திருப்பொதிகையூர்
வாழ்கையை திரும்பி வாழ்கிறோம் ... இன்று.

ஆனால் ஊர் பெயரில்லை எங்களுக்கென்று,
தெருவின் பெயரோ இல்லை எங்களுக்கென்று.
முகவரி ஏதும் இல்லை எங்களுக்கென்று.
அகதி முகாம் மட்டுமே எங்களுக்கென்று.
இதுவெல்லாம் எங்கள் மனதின் நெருடல்.
கடைசியாக, பிறந்தமண்ணில் சாக வேண்டும்
இது என் தந்தையின் ஏக்கம்

- சு.சுடலைமணி

எழுதியவர் : சு.சுடலைமணி (20-Dec-13, 4:58 pm)
சேர்த்தது : சுடலைமணி
பார்வை : 193

மேலே