கல்லறைக் காவியம்
கல்லறைக் காவியம்
ஆழிப்பேரலையாய் வந்தாய்,
அனைத்தையும் அள்ளிக்கொண்டாய்.
பினாமி போலே வந்தாய்,
சுனாமி என்று பெயர் வாங்கிக் கொண்டாய்.
அலையாய் வந்து,
அழவைத்து விட்டாயே.
அசுர குணம் கொண்ட,
ஆழிப்பேரலையே,
அவ்வளவு பசியா உனக்கு,
அப்பாவி மக்களைத் தின்ன?
உறவை தொலைத்தோம்,
உடமை தொலைத்தோம்,
உயிர் மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கிறது,
உடலுடன் சேர்ந்து.
காதலர்கள் உலவிய,
கடற்கரைகளில்,
கல்லறைகள் முளைக்கச் செய்தாயே.
கண்மூடித்தனமான உன் போக்கிற்கு.
காரணம் தான் என்ன?
கடல்மீன்களை நாங்கள்,
தின்கிறோம் என்ற காரணத்துக்காக,
கடல் நீ எங்களை தின்ன,
ஆசைப்படுவது,
எந்த விதத்தில் நியாயம்?
ஆழிப்பேரலையாய்,
ஆக்ரோஷமாக,
பொங்கியதுதான் உனக்குத் தெரியும்.
அன்றையதினம் நடந்தது,
உனக்குத் தெரியுமா?
இந்திய பிணங்கள்,
இந்தோநேசியாவிலும்,
இந்தோனேசிய பிணங்கள்,
இந்தியாவிலும்,
கரையொதுங்கின.
நோய் பரவும்,
அபாயத்திற்காக அப்பாவி மக்கள்,
அநியாயமாக,
கூட்டம் கூட்டமாக,
குழி தோண்டி புதைக்கப்பட்டனர்.
உயிரை மட்டும் வைத்துக்கொண்டு,
ஓட்டம் பிடித்தனர் சில மக்கள்.
பிணங்களைக் கூட,
விட்டுவைக்கவில்லை சில,
வெறிபிடித்த,
காண்டாமிருகங்கள்.
திருந்தாத சில,
திருடர்களின் கத்திகள்,
பிணங்களின் காதுகளையும்,
கழுத்துகளையும்,
பதம் பார்த்தது.
கேட்கவே கேவலம்.
நேரில் பார்த்தால்,
அவலம்.
நீ வந்து போய்,
இன்றோடு,
ஆறு வருடம் முடிகிறது.
நீ ஏற்படுத்திய காயத்தால் இன்னமும்,
கண்களில் கண்ணீர் வடிகிறது.
இழந்தவைகளும்,
இறந்தவர்களும்,
இனி வரப்போவதில்லை.
இறந்தவர்களோடு சேர்ந்து நீயும்,
இறந்திருப்பாய்,
இறந்திருக்க வேண்டும்.
இனி நீ அவதரிக்க கூடாது
இன்று ஏழாம் ஆண்டு,
நினைவஞ்சலியாக,
உனக்கும்,உன்னுடன்,
இறந்தவர்களுக்கும்,
ஆழ்ந்த அனுதாபங்கள்,
அலைகளாக எங்கள் மனதிலிருந்து.
ஆழிபேரலை மீண்டும்,
வரக்கூடாதென,
ஆண்டவனை வேண்டுகிறோம்.
வாடிய பூக்களுக்காக,
வருந்துகிறோம்.
சுனாமியே மீண்டும் வராதே,
துன்பம் தராதே.
கவிதையல்ல இது,
கல்லறைக்காவியம்.