பார்வைகள் பலவிதம்

காலை 8.30 மணி. சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம். 275 A பஸ். அம்பத்தூரிலிருந்து திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லம் வரை, ஜெமினி, சத்யம் தியேட்டர் வழியாக. அரசாங்க சொகுகு பேருந்து. வசதி குறைவு. ஆனால் டிக்கெட் காசு அதிகம்.

அலுவலகம் செல்பவர்கள், கல்லூரி, பள்ளி செல்பவர்கள் அவசர அவசரமாக பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தனர். ஆயிற்று, ஏறக்குறைய ஒரு நான்கு ஐந்து இருக்கை தவிர வண்டி நிரம்பி விட்டது.

பேருந்து கிளம்பியது. முதல் நிறுத்தம். குபேரன் பிளாட்ஸ். குடியிருப்பு பேர் தான் பணக்கார பேர். உண்மையில், நடுத்தர வர்க்க, கீழ் மட்ட மக்களுக்கான உளுத்துப் போன, 40 வருட கட்டடம். 500 சதுர அடி புறாக்கூண்டுகள். இவ்வளவு நாள் நின்று கொண்டிருப்பதே ஆச்சரியம்.

அந்த நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், பத்து பதினைந்து பேர் தடதடவென ஏறினர். அவர்கள் கண்கள் காலியான இருக்கைகளை தேடிக்கொண்டே. அவர்களிடையே அவசரம். அடித்து பிடித்துக் கொண்டு, ஒரு மியூசிகல் சேர் போல்.

இந்த களேபரத்தில், ஒரு முதியவர், கிட்டதட்ட ஒரு 60 வயதிருக்கும், ஒரு காலி இருக்கையை கண்டு பிடித்து, அதை நோக்கி அவரால் முடிந்த வேகத்தில் ஓடினார். நோயாளி என்பது முக சோர்விலேயே தெரிந்தது. வயது கொஞ்சம் அதிகம். ஆரோக்கியம் கொஞ்சம் கம்மி. சில பல அரசு பேருந்து போல.

அவர் இருக்கையை அடையுமுன், பின்னால் வந்த ஒரு 20-25 வயது,வாட்ட சாட்டமான இளைஞன், அவரை இடித்து தள்ளி விட்டு, எகிறி குதித்து, அந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவனது முகத்தில், ஒரு கோப்பையை தட்டிய மலர்ச்சி. ஒரு ராஜ பார்வை. பெரியவரை தள்ளி விட்டோமே என்ற வருத்தம் சிறிதும் இல்லை. பெரியவரிடம், ஒரு சின்ன சாரி கூட கேட்கவில்லை.

சிகப்பு நிற சட்டை, தாடை வரை கிருதா, வாராத தலை, ஐந்து நாள் தாடி, கொஞ்சம் சிவந்த கண்கள். சண்டைக்கு தயார் என்ற தோற்றம் அவனுக்கு. பின்னாளில், முயற்சி பண்ணினால், அவன் அரசியலில் ஒரு சிறந்த அள்ளைக்கையாகவோ, அடியாளாகவோ ஆக வாய்ப்பு இருப்பது போல் தெரிந்தது. அவனை தட்டி கேட்கிற தைரியம், சுற்றி இருந்த எவருக்கும் இருந்ததாக தோன்றவில்லை.

பெரியவர், பாவம், தள்ளாடி எழுந்து கொண்டார். கம்பியை பிடித்து கொண்டு. “த்சொ! த்சொ” கொட்டினார்கள்,அருகிலிருந்த சிலர். “பார்த்து! பார்த்து!” என்றனர்.

இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நாகரிக யுவதி, பள்ளி ஆசிரியை, ஒரு அருவருப்புடன் பக்கத்து சீட் காரியிடம் முணுமுணுத்தாள். “ சே! என்ன ஒரு அரகன்ஸ் அந்த பையனுக்கு! இந்த மாதிரியா அநாகரிகமாக நடந்து கொள்வார்கள்?”

இன்னொரு பயணி, ஒரு வக்கீல் கோபப்பட்டார் , “ சார் ! இந்த மாதிரி நடந்துகிறவர்களை கிரிமினல் வழக்கு போட்டு தண்டனை வாங்கி கொடுக்கணும்!. பொறுக்கி பசங்க. இதுக்கு ஏதாவது சட்டம் இருக்கா பாக்கறேன்?”

மூன்றாவது ஒரு நர்ஸ் , ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டே “ ஐயோ பாவம்! இந்த வயசானவர் கீழே விழுந்துட்டாரே! அடி கிடி பட்டிருக்குமோ?” என்று முணுமுணுத்தாள்.

நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த ஒரு கல்லூரி விரிவுரையாளர் “ வளர்ப்பு சரியில்லை சார். . அப்பா அம்மா சரியாயிருந்தா, இந்த பையன் நிச்சயமா இப்படி நடக்க மாட்டான்! இந்த பையன் சரியான மெண்டல் கேசா இருக்கும்”. அவர் கொஞ்சம் ஜட்ஜ்-மெண்டல் டைப்.

பெண்கள் பகுதியில், ஒரு 45 வயது பெண்மணி, கொஞ்சம் குண்டு. குழந்தை இல்லாதவள்.
முழு இருக்கையையும் அவளே அடைத்துகொண்டு, பக்கத்தில் ஒன்டிக கொண்டு அமர்ந்திருந்தவளிடம் , “இந்த மாதிரி பசங்களை பெத்துக்கறதை விட , பெத்துக்காம இருக்கறதே புண்ணியம்!” என்று அங்கலாய்த்தாள்.

கல்லூரி பெண் ஒன்றை கரெக்ட் பண்ணிக் கொண்டிருந்த ஒரு மாணவன் “பாத்து பெருசு! ஏன் இந்த கூட்டத்திலே வந்து கஷ்டப் படறீங்க! ஆட்டோல போலாமில்லே!”. நக்கலுக்கு, களுக்கென்று சிரித்தாள் அந்த பெண். அவங்க உலகமே வேறே.

அதை பார்த்து பொறாமை பட்ட சக மாணவன் “மேல போக டிக்கெட் எடுங்க பெரியவரே! இங்கே வந்து எடுக்கறீங்க”. பெண்களை பார்த்தால் எங்கேருந்து தான் வருமோ, இந்த அசட்டு பிசட்டு ஜோக்குகள். இதுக்கும் ஒரு களுக் அந்த பெண்ணிடமிருந்து. 'எத்தனை பசங்க என்னை பாத்து வழியறாங்க!', அந்த பெண்ணின் முகத்தில் ஒரு கர்வம்.

“முதியவர்களுக்கு மட்டும்” இருக்கையில் அமர்ந்திருந்தான் ஒரு 35 வயது இளையவன். எங்கே தன்னை எழுந்துக்க சொல்லுவாங்களோ என்று, ஆஸ்டிரிச் பறவை போல தலையை குனிந்து கொண்டான்.

ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது. கீழே விழுந்த பெரியவருக்கு யாரும் எழுந்து இடம் கொடுக்க தயாரில்லை. மனமுமில்லை. ‘வேறே யாராவது இடம் தரட்டுமே? நான் ஏன் தரணும்? அப்புறம் , யார் இந்த கூட்டத்தில் நின்னுகிட்டே பிரயாணம் பண்றது?’

அவரவர் பாணியில், அவரது படிப்பு, வேலை, மன நிலைக்கேற்ப, தங்கள் எண்ண வெளிப்பாட்டை முணு முணு த்தனர். ஏதோ அதுதான் அவர்களால் முடிந்தது!

கண்டக்டர் அவரது இடத்திலேருந்து “ டிக்கெட்! டிக்கெட்!”

பெரியவர் “ சத்யம் ஒரு டிக்கெட் கொடுங்க!”

“இந்தாங்க டிக்கெட்! அடி கிடி ஒண்ணும் படலியே!”

“ஒண்ணும் ஆவலை கண்டக்டர் சார். தேங்க்ஸ்”

நின்று கொண்டிருந்த ஒருவர் “ சார், பாவம், கீழே விழுந்தாட்டறேன்னு யாராவது எழுந்து இடம் கொடுக்கறான்களா பாருங்க! தன் சௌகரியம்தான் முக்கியம்!”. குரலில் கொஞ்சம் பொறாமை தெரிந்தது.

“இந்த காலத்து பசங்களே இப்படித்தான்! பெரியவங்க கிட்டே மரியாதை இல்லை”- மற்றொருவர் முணுமுணுத்தார்.

“உங்களை இப்படி இடிச்சுட்டு எப்படி அதப்பா உக்காந்திருக்கான் பாருங்க” – இன்னொருவர் அங்கலாய்த்தார், இருக்கையில் அமர்ந்து கொண்டு.

கண்டக்டர் “ சார்! பெரியவரே! நீங்க வேணா என் சீட்லே உக்காந்துக்கோங்க! ”

விழுந்த பெரியவர் சொன்னார் “ வேண்டாங்க. தேங்க்ஸ். இருக்கட்டும். இந்த மாதிரி பிள்ளைங்களை பெத்ததுக்கான தண்டனை சார் இது”

நின்று கொண்டிருந்த சக பிரயாணிக்கு ஆச்சரியம் . கேட்டார் “ அது உங்க பிள்ளையா சார்?”

பெரியவர் சொன்னார். “ ம். இல்லே! ”. குரலில் வருத்தம் தெரிந்தது.

கண்டக்டர் “பரவாயில்லை சார் ! உக்காருங்க!”

“நீங்க எதுக்கு கஷ்டப்படணும் கண்டக்டர். பரவாயில்லே”

கண்டக்டர் “ சார், இங்கே யாரையும் கேக்க முடியாது. அந்த பையனை போய் எழுந்திருக்க சொன்னா, சண்டைக்கு வருவான். என் நிம்மதி போயிடும். நீங்க உக்காருங்க”.

இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த, ஒரு இளைஞன் “ஐயா! இங்கே வந்து என் இருக்கையிலே அமர்ந்து கொள்ளுங்கள்!”

“இருக்கட்டும்பா !வேண்டாம்பா!” அவசரமாக மறுத்தார் பெரியவர்.

“இல்லே சார்!, இதுலே என்ன இருக்கு? என்னாலே நிக்க முடியும்! நீங்க உக்காருங்க ப்ளீஸ்!”

தட்டுத்தடுமாறி கம்பியை பிடித்து கொண்டு எழுந்தான் அந்த இளைஞன். பார்வை இல்லையென்றால் என்ன! மனசிருக்கே அவனுக்கு. போதாதா !


முற்றும்.

எழுதியவர் : முரளி (26-Dec-13, 6:47 pm)
பார்வை : 162

மேலே