இன்னொரு தாய்

என்னை பெற்றவளை விட
எனக்கு அதிகம்
பாலூட்டியவள் !

அவளோடு
பேசவேதான் ஆசை !

என்னோடு பேச
ஏனோ தயக்கம் !

மோசம் செய்தவனிடம்
என்ன நேசம்
என்ற கோபமா?

எத்தனை குழந்தைக்கு
தாயானாய்
புட்டி பாலூட்டி !

உன் பிள்ளைக்கு
பாலூட்ட தடுத்தோமே
அதுதான் சோகமா?

மூக்கணாங்கயிறு பூட்டி
உனக்கு ஆயுள் விலங்காய்
போட்டதால்
உன் நெஞ்சு வலித்து
பேசவில்லையா?

என் பேச்சும்
என் செயலும்
புரிந்து நடந்தாயே
அது எப்படி?

ஒருநாள்
"அம்மா" வென்று
என்னைவிட
தெளிவாய் அழைத்த போது
திரும்பியது
உன் தாயல்ல
என் தாய்!

பேசும் திறமை
உனக்குள்
உறைந்து கிடக்கிறது!

வீட்டில் பிரச்சனை
என்ற போது
நீயும்
பதற்றத்துடன் காணப்பட்டாய்!

உனது கன்றுகளை
விற்று காசு பார்த்தோம் !

பிள்ளையை பிரிந்து
நீ பட்ட வேதனையை
யார் அறிவார் ?

உனக்கு இழைத்த
கொடுமைகளுக்காக
நானும் அழுகிறேன்!
கொதித்து எழுகிறேன் !

உனக்கு வயதாகி விட்டதென்று
மூவாயிரம் ரூபாய்க்கு
அடிமாட்டுக்கு
விற்று விட்டு
நிற்கிறேன்!

அம்மா
அம்மா வென்று
கத்தி பார்த்தாய்

முன்னுக்கும்
பின்னுக்கும்
முரண்டு பிடித்தாய்
அடித்தே இழுத்து சென்றான் !

தாயை விற்றுநிற்கிறேன்
கையாலாகாதவனாய் !

எழுதியவர் : கோடீஸ்வரன் (27-Dec-13, 6:39 pm)
Tanglish : innoru amma
பார்வை : 231

மேலே