வேள்வி
வேள்வி
மிகுந்த மன வருத்தம், தேவியுடன் சண்டை, கோபம் கொண்டு சீக்கிரமே அலுவலகம் விட்டு வீட்டுக்கு போய் விட்டாள், சண்டைகள் இப்போதெல்லாம் சகஜம் ஆகிவிட்டிருந்தது, போகும் வழியில் போன் செய்யவில்லை, நான் அனுப்பிய குருஞ்செய்திகளுக்கு மட்டும் விடை வந்து சேர்ந்தது, எப்படியும் போனில் அழைப்பால் என்று தெரியும், இதை நம்பிக்கை என்று கொள்வதா?, இல்லை, வேறு ஏதோ ஒரு திமுரு எனக்குள் என்றே பட்டது, நான் அழைப்பேன் என்று எதிபார்திருப்பாள், நான் அழைக்கவில்லையே, சண்டைக்கு காரணம் நான் இல்லை என்றே பெரும்பாலும் நம்புவேன். இந்த நம்பிக்கையும் இன்னொரு சண்டைக்கு வித்திடும் என்று எண்ணி சில சமயம் நானே அழைத்து சண்டையை வளர்த்த கதைகளும் உண்டு. அது ஒரு பக்கம் இருக்கட்டும், ஏன் சண்டை வருகிறது என்று ஆராய்ந்தால் ஒன்றும் பெரிதாய் தோன்றாது, வெறும் சிகரெட்டுக்கு ஆகும் செலவு தான் மிச்சம். ஆக சண்டையில் தான் என் காதல் வாழ்க்கை பயணிக்கிறது, இந்த உறவு ஒத்துவராது, பிரிந்து விடுவோம் என்று வெறும் வாய்மொழிகள் பொழிந்தே இரண்டு வருடங்கள் கடந்துவிட்டோம். இதுவும் காதல் தானா? இதுகூடவா காதல்? இது காதலா? என்ற பல கேள்விகளுக்கு இன்றளவும் இருவரும் சேர்ந்தே விடை தேடிக்கொண்டிருக்கிறோம்.
பெரும்பாலும் சண்டையால் ஏற்படும் டென்ஷன் நானே உருவாக்கி கொள்கிறேனோ? என்று தோன்றும், ஏதோ ஒரு சாக்கு வேண்டும் சிகரெட் பற்ற வைக்க, என்று எண்ணுவேன். காதல் துளிர்த்த காலங்களில் தேவியின் கண்ணில் நீர் பார்த்த உடனே சமாதானம் செய்ய முற்படுவேன், ஏனோ இப்போதெல்லாம் அப்படி தோன்றவில்லை, மாறாக பெண்களின் கண்ணீர் பெரும்பாலும் பொய் என்றே எண்ண தோன்றுகிறது, காரியம் சாதிக்கவே கண்ணீர் ஆயுதமாகிறது பெண்களுக்கு, "எவ்வளவு அழகா நடிக்குறா இவ", என்று அவள் அழுகையை பார்த்து கொண்டிருக்கிறேன், விளைவு சண்டையின் அடுத்த கட்டம் போகிறோம்.
உண்மையை அறிந்து கொள்வது உறவுகளில் பிழைதான் போலும். அவள் அழுகைக்கு ஆட்பட்டு விட்டால் சண்டை முடிந்து ஒரு முத்தமோ அல்லது சிறிய அளவிலான ஒரு ஊடல் கூடல் என்று ஏதாவது பரிசு கிடைக்கும். உண்மை, தெளிவுடன் இருக்கிறேன் என்று பெருமை கொள்வதா? பரிசு பறிபோனதே என்று வருத்தம் கொள்வதா?, சண்டைக்கு பிறகு பரிசாக கிடைக்கும் காமம் இன்பம்தான். மனுஷன் தன் காம வேட்கைக்கு எப்படி எல்லாம் அழகு சேர்த்திருக்கிறான்!, இந்த உண்மை நிச்சியம் என் மனதில் பதிய கூடாது, பதிந்தால் துறவி தான் ஆக வேண்டும் நான். எதையோ ஆரம்பித்து ஏதோ பேசி கொண்டிருக்கிறேன் பாருங்கள். நம்ம கதைக்கு வருவோம்.
ஒருவழியாக வழக்கம் போல் அவளே அழைத்தாள், உடனே எடுத்தால் நம்ம தன்மானம் என்ன ஆவது?, ஒரு 4 ரிங்குகள் விட்டு எடுத்தேன், "5 மினுட்ஸ் ல நானே கால் பண்ற", என்று சொல்லி சிகப்பு பொத்தானை அமுத்தினேன். விடுவாள அவ, இரண்டு பக்க குறுஞ்செய்தி, BYE என்று சொல்லி முடிந்தது, இப்போது நான் அழைத்தேன், எங்கடா போச்சு உன் தன்மானம் என்று கேட்காதிர்கள் தயவு செய்து. நாளைக்காவது பரிசு வேண்டும் எனக்கு. தினமும் பரிசு வேண்டாம் என்று இருப்பது கஷ்டம் மக்களே. நான் சொல்வது ஆண்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.
அவள் குரல் தழுதழுத்தது, என்னோடு பேசும்போது மட்டும் தான் இப்படியோ என்று மனம் எண்ணியது, வேண்டாம் டா, நாளைக்கும் பரிசு பறிபோகும் என்று என்னை எச்சரித்ததும் அதுவே! என்ன மானம்கெட்ட மனசு டா இது?!!. ஒரு வார்த்தைக்கு ஒரு வார்த்தை என்று பரிமாறினோம், "அப்பறம்" என்ற சொல் பெரும்பாலும் காதலர்களிடம் புழங்கும், வேதனையில் புழுங்கும் என்று கூட சொல்லலாம், வார்த்தைகள் அழகாக விளையாடுகிறது பாருங்கள், தமிழின் சிறப்பு அது தான், நான் தமிழன்.
ஒரு வார்த்தைகள் படிப்படியாக முன்னேறி சண்டைக்கான காரணம் தேடுவதில் பெரிய வாக்கியங்களாய் வந்து நின்றது, அய்யோ!, மறுபடியும் முதலில் இருந்தா?!, வேண்டாமே, பரிசு வேண்டும் அல்லவா?!, "மூடுடா வாய" என்று மனம் கட்டளையிட, இந்த கட்டளை எனக்கு பிடித்திருக்கிறது, எனக்கா பிடிக்காமல் போகும்?!!!.
ஆனாலும் சண்டை தீர்ந்த பாடில்லை, என்ன செய்ய? ஒன்றும் செய்ய வேண்டாம், அவள் வீடு வந்து விட்டது, இன்னும் இரண்டு நிமிடத்தில் அழைப்பு துண்டிக்க படும். துண்டிக்கப்பட்டது, பரிசு நாளைக்கு உண்டா? இல்லையா?, அது நாளை தான் தெரியும், நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
பழகிவிட்ட சண்டை தான், இருந்தாலும் இந்த சண்டையின் கால அளவு சற்றே பெரிது. காரணம் அப்படி, தன்னிலை தன்னியல்பு மாற்றி காதலிக்க நான் தேவை இல்லையே?!, இருந்தும் சிறிதளவு மாற்றி தான் ஆக வேண்டும், ஆண்கள் பெரும்பாலும் பெண்களிடம் நடிப்பு வாழ்க்கைதான் வாழ்ந்தாக வேண்டும் என்று நினைக்கிறேன், இந்த நினைப்பு எந்த அளவு உண்மை என்பது நான் அறியேன். என்னுடைய அனுபவ அளவில் மட்டுமே இதை நான் சொல்கிறேன். உண்மையாக வாழ்பவர்கள் மேலும் சிறந்து வாழ என் வாழ்த்துக்கள்.
என் அலுவல் நேரம் முடிந்து கிளம்பினேன், தனிமை இனிமை தான், கூடவே ஒரு பெண் வாசத்தோடு நடந்து பழகி விட்டதால் இந்த தனிமை கொஞ்சம் கொடுமையாகவும் இருந்தது. தனிமையின் எண்ண அலைகளை ஆட்கொண்டு நடந்தேன், அவளோடு நடக்கும்போது உணரும் ஒரு வித வெப்பம், பெண்ணுக்கே உரியது, இப்போது இல்லை.
கிண்டி ரயில்வே மேம்பாலம் கடந்து தான் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். ரயில்வே படியில் நெருக்கடி மிகுந்திருந்தது, அப்போது தான் ஒரு மின்சார ரயில் பயணிகளை இறக்கிவிட்டு அடுத்த நிலையம் நகர்ந்தது, கூட்டத்திற்கு நடுவே அவசர கதியில் ஓடி படியில் தடுக்கி நிற்கிறார்கள் சிலர், கலைகல்லுரி மாணவர்களின் கும்பல் ஒன்று பெரும் சத்தத்தோடு என்னை கடந்து சென்றது, காதுகளில் விழுந்த சில கெட்ட வார்த்தைகள் எல்லாமே பெண்களை இழிவு படுத்தியே இருந்தது, யார் இப்படி கெட்ட வார்த்தைகளை கண்டுபிடித்தார்கள்?!, படுபாவிகள் என்று எண்ணிய மறுகணம் இதை கேட்க நான் யார்?, என்ற கேள்வியை என் மனம் முகத்தில் அறைந்தது. நானும் அந்த வார்த்தைகளை உபயோகிப்பேன் கோபம் வரும் சமயங்களில், ஆண் என்ற ஆதிக்க வர்கத்தில் நானும் அங்கம் தானே?!, என்ன, கொஞ்சம் என் அதிகார அளவை நானே குறைத்து வைத்து கொண்டுள்ளேன், நான் பெற்று கொண்டுள்ள சமூக அங்கீகாரம் என்னை இந்த அடிப்படையில் அனுமதிக்காது, அவ்வளவு தான். படிகள் முடியும் இடத்தில் எதிரில் வரும் என்னைப்போலவே சமூக அங்கீகாரம் பெற்ற சில ஆண்களும், பெண்களும் பெரும்பாலும் மூக்கை பொத்தி கொண்டே வந்தார்கள், அப்படி ஒரு மூத்திர வாடை, அதன் அருகிலே பிச்சைகாரர்களின் அணிவகுப்பு கைகள் பிச்சை பாத்திரம் மட்டுமே பிடித்தபடி. ஒரு மனிதன் கண்தெரியாத ஒரு பிச்சை காரரிடம் சண்டையிட்டு கொண்டிருந்தான், நான் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே தான் வந்தேன், என் கால்கள் அந்த காட்சியை கடந்தபடி தான் இருந்தது, வெட்கமாக தான் இருக்கிறது இப்படி சொல்வதற்கு, நான் கண்ட எல்லா அவசர கதி மனிதரின் கால்களும் அந்த காட்சியை கடந்தே வந்தது. இன்னொரு கண்தெரியாத பிட்சைக்காரரே வந்து அவரை காப்பாற்றி சென்றார். கண் கொண்ட மனிதருக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை, என்ன ஒரு அவசரகதி உலகம்?!, இதில் நானும் ஒருவன்!, இப்படி நான் அவசரம் காட்டுவது தொலைக்காட்சி பார்க்கவும், செய்திகள் கண்டு என் எதிவினை ஆற்றவும், மனிதம் குறித்த புத்தகங்கள் படிக்கவும் தான்.
இந்த 5 நிமிட குற்ற உணர்வு தேவி உடனான சண்டை கசப்பை மறக்க செய்தது நல்ல விஷயம். பேருந்தில் இடம் இருக்க வேண்டுமே என்று மனம் எண்ணிய சமயம் நண்பன் ஒருவன் சொன்னது நினைவு வந்தது. அவன் சொன்னான்," பஸ் கூட்டமா இருந்த தா சூப்பர் மச்சி, பின்னாடி போய் நின்னுக்கோ, அங்க தான் சொர்க்கம் இருக்கு என்று". நான் பெரும்பாலும் டிக்கெட் எடுத்துவிட்டு ஓட்டுனர் இருக்கையின் அருகில் சென்று நின்று கொள்வேன். இது நான் நல்லவன் என்பதற்கு அல்ல, பள்ளி பருவத்தில் ஒரு பெண் ஒருத்தனை பஸ்லயே செருப்பில் அடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் இவ்வளவு தைரியம் படைத்த பெண்கள் பெரும்பாலும் குறைவு தான், ஏன்? இதை விரும்பும் சில பெண்களையும் நான் பார்த்ததுண்டு.
தேவியுடன் பேசும்போது உருவான ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது, "கிச்சடியில் பச்சையாக தெரிவது பச்சை மிளகாயா? பீன்ஸா? என்று சாப்பிட்டால் தான் தெரியும்". இப்படி எனக்கு நிறைய வசனங்கள் தேவியுடன் பேசும்போதும், சண்டையிலும் வரும்.
பேருந்து வந்தது, கூட்டம் தான், நிச்சயம் குன்றத்தூர் போய் சேரும்வரை இடம் கிடைக்காது, இதை விட்டால் அடுத்து வருவது இன்னும் கூட்டமாகவே வரும், ஏறினேன். கண்டக்டர் இருக்கையை விட்டு எழமுடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது, இந்த கூட்டத்தை சற்றே முதியவரான அந்த கண்டக்டர் விரும்புவார் என்றே தோன்றியது, இல்லையேல் அவர் அங்கும் இங்கும் நடந்து டிக்கெட் கொடுக்க வேண்டியிருக்கும். ஆண்கள் பெண்கள் என கல்லூரி பட்டாளம் குதூகலமாய் இருந்தார்கள். மாணவர்களின் தகர இசை கச்சேரி சகிக்க வில்லை, சினிமா பாடல்களின் வரிகளை மட்டும் மாற்றி ஒருவன் சத்தமாக பாடிகொண்டே இருந்தான், ஏதோ மூக்கை மூடிக்கொண்டு ஆழ்குரலில் இருந்து கேட்கும் சத்தமாய் அந்த பாடிய குரல் இருந்தது. அவர்களின் கல்லூரியை புகழ்ந்தும், எதிரி கல்லூரியை இகழ்ந்தும் வரிகள் இருந்தன. பாதி அளவுக்கு பெயர்ந்து இருந்த பேருந்தின் தகரத்தில் எழுந்த ஒலி மண்டையை பிளப்பது போலிருந்தது, மக்களின் சகிப்பு தன்மையை பேருந்தில் நன்றாகவே உணரலாம்.
பேருந்தில் இருந்த கல்லூரி பெண்களை கவர பாடப்பட்ட பாடல்களில் பெண்களை இழிவு செய்தே வரிகள் இருந்தது, பெண்களின் மத்தியில் இதற்கு எவ்விதமான எதிர்வினையும் தெரியவில்லை, மாறாக சிரித்து கொண்டிருந்தார்கள், அவர்களின் சிரிப்பு பாடகனை மேலும் குஷிபடுத்தியது, மேலும் பாடல்கள் தோன்றியது. இதை எல்லாம் விமர்சிக்க என்ன தகுதி எனக்கு இருக்க கூடும்?! மாணவ பருவம் கடந்து வந்தவன் தானே நானும்?, என் தகுதி என்பது என் ஏக்கம் என்றே நான் கூறுவேன். இதெல்லாம் நான் செய்ய வில்லையே என்ற ஏக்கம், நான் கல்லூரிக்கு பேருந்து உபயோகித்தது குறைவு தான், மேலும் நான் படித்த கல்லூரி அப்படி, கல்லூரி நிர்வாகம் மிகவும் கண்டிப்பானது.
நந்தம்பாக்கம் நிறுத்தத்தில் பேருந்து இன்னும் கூட்டம் ஆனது, கூட்டத்தை பாராமல் பெண்களும் ஏறினார்கள், நான் ஆண்களின் வரிசையோரம் ஒரு இடம் பிடித்து நின்று கொண்டேன், என்னை கடந்து சில பெண்கள் சென்றார்கள். ஜன்னல் பக்கமாக நான் வேடிக்கை பார்த்து கொண்டும், தேவியை நினைத்து கொண்டும் வந்தேன். சண்டை போட்ட நேரங்களில் கிடைக்கும் தனிமைகளில் அவளுடனான என் அந்தரங்க வாழ்க்கைகளை அசை போடுவது ஒரு மகிழ்வை தரும் எனக்கு. என் பார்வை சற்றே பேருந்தின் உட்புறம் சென்றதை ஒரு வித ஈர்ப்பு என்றே உணர்ந்தேன், ஈர்ப்பின் காரணம் கட்சிதமாய் நின்றிருந்த ஒரு பெண், பிங்க் கவரும் நிறம் தான், பிங்க் நிற சுடிதார் உடுத்தியிருந்தாள், மணமாகிய பெண் என்பதை உச்சி நெற்றியில் இருந்த குங்குமம் உணர்த்தியது இருந்தும் பார்வை விலகவில்லை, விலக்கமுடியவில்லை. என் சுயம் தாண்டிய ஒரு உணர்வில் என் பார்வை தானாகவே அந்த பெண் பக்கம் சென்றது, சுயம் பெற்று பார்வை விலக்கியது ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை. சுடிதார் அணிந்திருந்தாள், கைகள் எட்டி பேருந்தின் கம்பிகளை பிடித்திருந்தது.
என் பார்வை இப்படி அடுத்தடுத்து எடுத்த படையெடுப்புகளில் ஒரு ஆணின் உருவம் தடைப்பட்டது, 30 வயதுக்குள் தான் இருக்கும், சுருட்டை முடி, கருப்பான நிறம், பெரிய கட்டங்கள் போட்ட சட்டை, பஜார்'ல் எடுத்த ஒரு வெளுத்த ஜீன்ஸ் பேண்ட், கையில் 10 ரூபாய் காப்பு, மொபைல் போனை கையில் பிடித்துகொண்டு கம்பியை பிடித்தபடி அந்த பெண்ணின் அருகில் நின்றிருந்தான், அவன் பார்வையில் ஒரு ஜாக்கிரதை உணர்வு இருந்தது, யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்பதை உறுதி செய்த படியே நின்றிருந்தான். அந்த பெண்ணின் மார்பை நோக்கியே அவன் பார்வை பாய்ந்தது, அவன் கைகளும் அந்த பெண் பிடித்திருந்த கம்பியை பிடித்திருந்தது, பிரேக் போடும்போது அவளின் கைகள் உரசும்படி அவன் கைகள் இருந்தன, அந்த பெண்ணோ பக்கத்தில் இருந்த பெண்ணிடம் பேசிகொண்டே வந்தாள், எதையும் அறியாதவளாக, அல்லது அறிந்தும் அறியாதவளாக.இதையாவும் நான் பார்த்தது சமுகத்தின் அவலம் என்று நினைத்தா இல்லை அவன் இடத்தில் என்னை கற்பனை செய்தா?!, நிச்சயம் எனக்கு தெரியவில்லை!.
அந்த பெண் கோவூர் நிறுத்தத்தில் இறங்கினாள், பேருந்தும் கொஞ்சம் காலியானது, ஜன்னல் வழியே அந்த பெண்ணை பார்க்க அழகாக இருந்தாள், மாலை மங்கிய நேரத்தில் அவளின் சிறிய மூக்குத்தி ஜொலித்தது நட்சத்திரம் போல். பேருந்து அவளை கடந்தது, இப்பொழுது பேருந்தில் அந்த அளவிற்கு கூட்டம் இல்லை, எனக்கு இருக்கை கிடைத்தது. அந்த மனிதன் இப்போது படிகளில் நின்று பயணம் செய்தான், நான் அமர்ந்தபடியே அவனை பார்த்து என் பயணம் தொடர்ந்தேன்.