நட விடியல் தோன்றும்

மலராத மலரெங்கும் உளதோ - மீண்டுமிருள்
புலராத காலைதனும் உளதோ - பூவிதழில்;
உலவாத வண்டினமெங் குண்டோ உயிர்போக்கும்
பலகாதகர் செய்லும் சரியோ

குலையாத குழல் மாதர் இயல்போ - மறைமுகிலம்
விலகாத மதி வானில் உளதோ - நினைவழிய
புலம்பாத எவரும் இங்கே உளதோ -தமிழரிவர்
குலம்காக்க நீதிதன்னும் வருமோ

படராத கொடி பார்த்த துண்டோ - ஒளிபடர
தொடராத நிழல் தேகம் கொளுமோ- எமைச்சூழ
இடராக வந்த பெரும் பகையோ - இவர்வாழ
விடலாமோ எம்கதியும் இழவோ

கடலோடிச் சூழ்நிலமும் எமதே - இதைவந்து
தொடலாமோ அந்நியனை விடவோ - மெய்கீறி
குடலாக இவன் உருவ சடமோ - நம்விழியில்
படலாமோ விடநாமும் முடமோ

அறமின்றி அநியாயம் பலமோ- அடிமையென
மறமின்றித் தமிழ் மாந்தர் கெடவோ -கொண்டகுவை
துறவென்று மனை விட்டு செலவோ- வந்தபகை
உறவென்று நிலம்கொள்ளல் தகுமோ

சுடும் தீயில் வெந்தழியும் வாழ்வைப் - புதிதாக்க
எடுஎண்ணம் உயிராய் மண்நேசி - இன்றுவிடில்
வடுவாகும் உனது பெருவாழ்வும் - கடமையைத்
தொடுவீர மொடு விடியல் தோன்றும்

எழுதியவர் : கிரிகாசன் (31-Dec-13, 5:01 am)
பார்வை : 83

மேலே