இங்கே ஓர் ராதை

நெருக்கியடித்துக் கொண்டு
எட்டிப் பார்க்கிறது,
மலர்க்கூட்டம் ஒன்று ..
என்னைக் காண..
என் ஜன்னலின் வழியே!

காவல்காரத் தென்னைமரங்கள்
கால்வலி மறந்து நிற்கின்றன
எனைக் கண்டுவிட்ட லயிப்பில் !

தோட்டத்திலிருந்து எட்டிப்
பார்க்கிறது இளந்தென்னைக்
குருத்தொன்று ..
என் தரிசனத்தை
முழுதும் தானே காணவேண்டும்
என்னும் ஆசைவசத்தால் !

சிற்றணில்களுக்கெல்லாம் ஒரே
கொண்டாட்டம் ..
சறுக்கியபடி ஓடியும் திரும்பியும்
கொண்டிருக்கின்றன அதன்
வசிப்பிடங்களுக்கு
தென்னை ஓலை வழியே !
அட !ஜன்னலருகே நான் !..

குட்டிச்செடிகளுக்கெல்லாம் ஒரே
வேண்டுதல்தான் ..
தாங்கள் இன்னும்
வளர வேண்டுமென்பதே ..
எனைக் காண வேண்டுமல்லவா !

எனக்காகக் காத்திருக்கின்றன,
மொட்டவிழத் துடிக்கும் மலர்கள்
என் புன்னகையில் பூப்பூக்க !

பூத்துக் குலுங்குகின்றன
மார்கழிப் புஷ்பங்கள் ..
என் பார்வை தீண்டியதால்,
ஓரத்தில் பூத்திருந்தும்
மணம் மட்டும் தோட்டத்தை
நிரப்பியபடி !

இரவெல்லாம் எனைக் காணாத
ஏக்கத்தில் பனித்துளிகளில்
கண்ணீரை வெளிப்படுத்தியபடி
இன்று மலர்ந்திட்ட மலர்கள்
இதழ்களில் அணைகின்ற
மலர்ச்சியைத் தேக்கியபடி !

மரத்தடியில் குவிந்திருந்த
செங்கற்கள் மேலும் சிவந்து
போகின்றன எனைக் கண்ட
வெட்கத்தால் !

கரைந்துவிடுகின்றன செங்கற்கள்
அதன் அன்பை வெளிப்படுத்த
அன்று கொட்டிய மழையில்!

பூக்கள் சொரிந்து
தங்கள் அன்பு காட்டுகின்றன ,
பவளமல்லிகளும் மகிழங்களும் !

மழைவிட்ட பின்னரும்
வானெங்கும் சிறுசிறு
தூறல்கள் சில்லென ..
எனக்காய் !

காத்திருக்கிறேன் நான் ,
எல்லாம் எனக்காகவே
இருந்தும் ..

புல்லாங்குழலின் இனிய
கீதத்தால் என்னை வருடும்
கார்மேகவண்ணனின் காதற்காற்றை
என் சுவாசப் பைகளில் நிரப்ப
எனதுயிரை அதில் தேக்கி ,
மைவிழிகளில் மையலுடன்
ஓர் மார்கழியின் அதிகாலைப்
பனியில் நனைந்திட்ட ரோஜாமலராய்
என் காதல்கண்ணனின் வரவிற்காக !!

எழுதியவர் : கார்த்திகா AK (31-Dec-13, 12:19 am)
Tanglish : ingey or raathai
பார்வை : 162

மேலே