ஆண் நண்பன்
இதுவரை நான் அதிகம் பழகியதில்லை , ஆண்களிடம்.
என்றாலும்,
தொட்டுப் பேசும் தோழமை உன்னிடம் மட்டும்.
உன்னுடனான பொழுதுகளில் என் எல்லைகளை நான் மறந்தாலும்
உன் வயதின் சில்மிஷம் ஒரு போதும் எட்டிப் பார்த்ததில்லை என்னிடம்.
வீடு திரும்ப தாமதமான இரவுப் பொழுதுகளில்
பேருந்திற்காக, ஒற்றை ஆளாய் நான் காத்திருக்க
என்னுடன் காத்திருந்து என்னை வழியனுப்பிய தருணங்களில்
என் பாதுகாப்பு ஆனது உன் நட்பு.
யாரிடமும் சொல்ல முடியாத துயரங்களையும்
உன்னிடம் கொட்டி தீர்த்து நான் அழ,
சாய தோள் கொடுத்து, நீ ஆறுதல் கூறிய போது
என் அன்னையின் மடியானது உன் தோள்கள்.
கெட்ட வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டு
நான் உன்னை நச்சரிக்க
நீ, அதைச் சொல்லாமல் சிரித்து மழுப்பிய போது
என் தம்பியின் குறும்பானது உன் நட்பு.
வீசிய காற்றில் ஆடை விலகியது தெரியாமல்
நான் உன்னுடன் மும்முரமாய்ப் பேசிக்கொண்டிருக்க,
நீ சலனம் எதுவும் இல்லாமல்
தலையை தட்டி,என் உடையை சரி செய்ய சொன்ன போது
தோழா, உன்னிடத்தில் என் தந்தையைக் கண்டேனடா !!!.
-சரண்யா நந்தகோபால்.