வாழ்த்து நமக்கெதுக்கு - குமரிபையன்

புத்தாண்டு பிறந்ததடா...!
புத்தாண்டு பிறந்ததாடா..?.
புரையோடிய எதைபுதைத்து..?
புதியாய் பிறந்துவந்ததடா..!
புன்னைகைத்து நான் வரவேற்க..?

இன்றோடு ... ...

பிறந்த பொழுதே வீசி எறியும்
பிறப்பை தடுத்து விட்டிடுமா..?
சிரிக்கும் வயதில் நெஞ்சை பிழியும்
சிறுவர் தொழிலை தடுத்துதிடுமா..?

கற்க செல்லும் பூவையர் கற்பை
கறை இல்லாமல் சேர்த்திடுமா..?
பணிக்கு செல்லும் பெண்டிர் கூசும்
பாலியல் பார்வையை பறித்திடுமா..?

படித்து நிற்கும் இளைஞர் கூட்டம்
பணியில்லாமை குறைத்திடுமா..?
எங்கே இலவசமென்று ஏங்கும்
ஏழ்மையை வீசி எறிந்திடுமா..?

கடலலை நடுவில் தமிழன் சாவு
காட்சி கொடுமை நின்றிடுமா..?
மது அரக்கன் ஒழிந்தான் என்று
மல்லு கட்டி வென்றிடுமா..?

காதல் கரத்தை இணைக்க மறுக்கும்
கயவர் பலத்தை கரைத்திடுமா..?
கள்ள காதல் கொடிய நஞ்சை
கடலை கடத்தி விட்டிடுமா..?

பட்டினி சாவு பஞ்ச சாவும்
பஞ்சாய் ஊதி மறைத்திடுமா..?
தனயன் வளர்ந்து தாயை விரட்டும்
தனிமை முதுமை முடித்திடுமா..?

ஊழல் லஞ்சம் இல்லா அரசு
இதுதான் என்று காட்டிடுமா..?
ஜாதி மத சண்டை இல்லா
ஜனங்கள் நமக்கு சொல்லிடுமா..?

மண்ணும் பொன்னும் பேரமில்லா
மங்கையர் திருமணம் அழைத்திடுமா..?
மனிதனை மனிதன் மதித்து வாழ
மனித நேயம் நிறைந்திடுமா..?

முள்ளி வாய்க்காலின் முனகல் ஓசை
முரசறைந்து ஒலித்திடுமா..?
ஓலமிடும் சிங்கள வெறியை
ஓசையின்றி அடித்திடுமா..?

வெறுமை காணும் தமிழன் செவியில்
வெற்றிச்செய்தி இசைத்திடுமா..?
எரியும் உணர்வை எட்டு திக்கும்
எரிமலையாய் வெடித்திடுமா..?

தன்மானமுள்ள தமிழனுக்கு அந்த
தலைவனை மீண்டும் தந்திடுமா..?
முளைகள் விட்ட தமிழன் ஈழம்
முடிவில்லாமல் வளர்ந்திடுமா..?

தரணி போற்ற தங்க தமிழில்
தரமிகு காவியம் படைத்திடுமா..?
தமிழை தமிழர் தமிழாய் பேச
தமிழை தமிழனில் நிறைத்திடுமா..?

பழையன முடித்து திருத்தி இன்று
புதிய பாதையில் புறப்படுமா..?
புரிவாய் மனிதா சொல்வாய் இன்று
பழையன எதுவும் மாறிடுமோ..?

இறுதி இலக்கம் இடையில் சொருகி
இரவில் வந்தால் புத்தாண்டா..?
இல்லை.. இல்லை..இல்லவே இல்லை
இதுக்கு வாழ்த்து நமக்கெதுக்கு..?

எழுதியவர் : குமரி பையன் (1-Jan-14, 12:00 am)
பார்வை : 430

மேலே