எழுத்து தளத்தின் கவனத்திற்கு-கே-எஸ்-கலை
எழுத்து நிர்வாகத்தினருக்கு வணக்கம்
இறுதி தேர்வு பட்டியல் குறித்து ஒரு சில விடயங்கள் கூற விரும்புகிறேன் !
கடந்த சில மாதங்களாக அறிவிக்கப்படும் இறுதி தேர்வுப் பட்டியல்கள் குறிப்பிட்ட ஒரு பத்து படைப்பாளிகளை மட்டுமே மீண்டும் மீண்டும் தாங்கி வருகிறது ! இது தளத்தின் கீர்த்திநாமத்திற்கு ஏற்படும் பெரிய இழுக்கு என்பதை அக்கறையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் !
பதினேழாயிரம் பேர் வரை அங்கத்தவர்களாய் இருக்கும் இந்த தளத்தில் இப்படி ஒரு பத்து பேர்களை மட்டுமே மீள் சுழற்சி முறையில் இறுதி தேர்வுப் பட்டியலுக்கு அறிவித்தல் என்பது சரியான முறையல்ல என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
தளத்தின் இறுதி தேர்வு குறித்தான மின்னஞ்சல் எல்லா அங்கத்தவருக்கும் தனிப்பட்ட ரீதியில் கிட்டினாலும் இறுதி தேர்வு பட்டியலில் வாக்களிக்க பெருமளவிலானோர் முன் வராமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்றாக் இந்த “தொடர்ந்து வரும் படைப்பாளிகள்” என்பதும் முக்கியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
குறிப்பிட்ட சில படைப்பாளிகளின் கூட்டணிகள் தமக்குள் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் தேர்வுகள், கருத்துகள் மூலமாக மிக மோசமான அல்லது கவிதை என்றே சொல்ல முடியாத படைப்புகள் கூட பட்டியலில் முன்னணியில் வந்து நிற்பது துரதிஷ்டவசமானது !
இப்படி நடப்பதற்கு ஏதுவாய் இருப்பது தளத்தின் செயற்பாட்டு பிரச்சினை அல்ல என்பதையும் அறிகிறோம். இருப்பினும் இது குறித்து தளம் சற்றே சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது !
இங்கு பட்டியலில் முன்னணியில் இருக்கும் படைப்புகளையும் அவர்களுக்கு யார் யார் தேர்வுகளை வழங்கி இருக்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் நான் சொல்லுவதில் உள்ள உண்மை புலப்படும் !
மேலும் பொதுவாக இங்கு புள்ளி வழங்குபவர்கள் தமக்கு வேண்டப்பட்டவர்கள் படைப்பு வழங்கினால் உடனே சென்று ஐந்தாவது நட்சத்திரத்தைச் சொடுக்கி விட்டு, கருத்தில் இல்லாததும் பொல்லாததுமாக பாராட்டுகளைப் பொழிந்து இலக்கியம் என்பதன் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறார்கள் ! (எனது படைப்புகளிலும் இவை நடப்பது வெகு சாதாரணம்)
ஒரு படைப்பை சரியான கோணத்தில் அணுகி அந்த படைப்பின் தரத்தை சரியான விதத்தில் தரபடுத்தும் பக்குவம் தோழர்களிடையே இல்லாதிருப்பது கவலைக்குரியதே ! (பெரும்பாலும்)
எனவே தளம் இது குறித்து நிச்சயமாக சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் !
ஒரு சிறிய முன்மொழிவையும் செய்ய விழைகிறேன்.
அதாவது எல்லா படைப்பாளிகளுக்கும் புள்ளி வழங்க இருக்கும் சுதந்திரத்தை மட்டுபடுத்தி “நடுநிலையாளர்கள்” மட்டுமே புள்ளி வழங்கி ஒரு கவிதையை தரபடுத்த முடியும் என்று நடைமுறைப்படுத்தினால் என்ன ? அப்படி நடைமுறைப்படுத்தினால் இறுதி தேர்வுப் பட்டியலுக்கு பொறுப்புக் கூறும் கடமையும் அக்கறையும் நடுநிலையாளர்களைச் சாரும்.
நல்ல இலக்கிய அறிவுள்ளவர்களும், சிறந்த மதிப்பீட்டுத் தகுதி உடையவர்களையும் நடுநிலையாளர்களாக தளம் அறிவிக்க வேண்டும். நடுநிலையாளர் என்பவர் சரியை சரியெனவும் பிழையை பிழையெனவும் நுண்ணியமாக கணித்துச் சொல்லக் கூடிய தகுதி உள்ளவராக இருத்தல் மிக அவசியம் !
தற்போது எத்தனை நடுநிலையார்கள் இருக்கிறார்கள் என்பதை அறிய வாய்ப்பில்லை. இருப்பினும் தளம், தளத்தின் அங்கத்தவர்களை கருத்திற் கொண்டு இன்னும் சில நல்ல திறமையான படைப்பாளிகளை இந்த வட்டத்துள் இணைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
திருவாளர்கள் – காளியப்பன் எசேக்கியல், ஜோசப் ஜூலியஸ், மெய்யன் நடராஜ், பொள்ளாச்சி அபி, வெள்ளூர் ராஜா, ரோஷன் ஜிப்ரி, கோவை ஆனந்த், ரத்தினமூர்த்தி, எழில் சோம பொன்னுசுவாமி, ரமேஷலாம் போன்றோரையும் இந்த நடுநிலையார்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம் என்பதும் என்னுடைய முன்மொழிவாக இருக்கிறது !
நடுநிலையாளர்கள் ஐம்பது பேர் இருந்தால் இந்த இறுதி தேர்வு பட்டியல் குறித்தான சர்ச்சைகளுக்கு ஓரளவிற்கு முடிவு கட்டலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்!
========
மேலும் தளம் “அறிவித்தல்” என்றொரு புதிய பகுதியினை அறிமுகம் செய்ய வேண்டும். இதில் அங்கத்தவர்கள் தமக்கு தேவையான அறிவித்தல்களை பதிவு செய்துக் கொள்ள முடியம். அதே போல நிர்வாக அறிவித்தல்கள், வர்த்தக அறிவித்தல்கள் போன்றவற்றையும் தளம் உள்வாங்கிக் கொள்ளலாம்.
நிர்வாக அறிவித்தல் என்ற பகுதியில் நிர்வாகம் செய்யும் புதுப்புது மாற்றங்களையும், புதிய விதிமுறைகளையும் உறுப்பினர்களுக்கு அறியத் தர வாய்ப்புண்டு !
வர்த்தக அறிவித்தல்கள் என்ற பகுதியை மேம்படுத்தி பின்னாட்களில் சிறு கட்டண வசூலிப்புடன் விளம்பரங்களையும் தளம் உள்வாங்கிக் கொள்ளலாமே. இது தளத்தின் நிதி தேவைகளுக்கு உதவியாக இருக்கும் அல்லவா ?
இப்படியொரு அறிவித்தல் பகுதி அறிவிக்கப்படின் “அறிவித்தல்கள்” சார் படைப்புகள் இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்காமல் இருப்பதுடன் குறித்த இடம் ஒரு சிறந்த படைப்பிற்கு கிடைக்கும் அல்லவா ?
எழுத்து தளத்தைப் போன்றே பல இணைய தளங்கள் அங்கத்தவர்களை வைத்துக் கொண்டு இலக்கியங்களை பிரசுரித்தவண்ணம் உள்ளதை காண்கிறோம். அப்படி இருக்கும் போது பல புத்தி ஜீவிகளின் பார்வை நம்முடைய தளத்தின் மீது நிச்சயம் படும். அப்படி பார்வை படும் வேளையில் பரிசுக்குரிய ஒரு படைப்பையோ, அல்லது இறுதி தேர்வுப் பட்டியலையோ பார்த்து ஏளனம் செய்யும் அளவிற்கு இருக்கக் கூடாது !
இறுதி தேர்வுப் பட்டியலில் தரமற்ற படைப்புகள் முன்னிலை வகிப்பதும், தொடர்ந்தும் நட்பு வட்டத்தின் பரஸ்பர கொடுக்கல் வாங்கல்களினால்
இறுதி தேர்வுப் பட்டியல் முறையற்ற விதத்தில் வெளியாவதும் நான் இந்தக் கட்டுரையை எழுதக் காரணமாக அமைந்தது என்பதை யாவரும் அறிதல் வேண்டும்.
இங்குள்ள முன்மொழிவுகள் யாவும் என்னுடைய தனிப்பட்ட கருத்துகள் என்பதால் அவை குறித்து கருத்து சொல்ல விரும்புபவர்கள் தமது கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளலாம்.
தரத்தின் முகவரியாக மட்டுமே எங்கள் எழுத்து தளம் எப்போதும் இருக்க வேண்டும் !
அதற்கான அக்கறையுடன்....
இலங்கையிலிருந்து...
கே.எஸ்.கலைஞானகுமார்