துப்பானவை துப்பாக்கும் புத்தாண்டு-அல்லது -கடுப்பேத்தும் கனவுகள் -எசேக்கியல்
=========அறுசீர் விருத்தம் ==========
சிந்தையில் வேண்டாம் சீர்கேடு;
==சிரத்தை யிழப்போர் இனியேது?
நிந்தைக் கான செயற்பாடு
==நீடிக் காதே அரசோடு!
மந்தை யில்லை மக்களினி
==மனத்துள் தேரும் பண்பாடு!
விந்தை தான்,இந் நிலைப்பாடு!
==விடிந்ததே இனிய புத்தாண்டு!
உழவனுக் கில்லை போரட்டம்!
==உணவினுக் கில்லை திண்டாட்டம்!
பழுதிலா வாழ்க்கைத் தேரோட்டம்,
==பசி,பிணி நீங்கிக் கொண்டாட்டம்,
அழுபவ ரில்லா மனவூட்டம்
==ஆண்டவர் செயலால் கைகூடும்!
முழுமையைத் தேடும் நெஞ்சோடும்
==முயற்சிகள் கூட்டும் புத்தாண்டே!
வற்றிய தாய்மடி இருக்காது!
==வறட்சியைக் குழந்தைகள் காணாது!
தொற்றிடும் நோய்கள் தொடராது!
==தொட்டில் எனும்,இப் பூமியின்மேல்
முற்றுப் பெறுமே தீச்செயல்கள்!
==முடிச்சுகள் முயற்சி நீக்கிடுமே!
மற்றும் நலங்கள் முன்வருமே!
==மகிழ்ச்சியில் வருதிப் புத்தாண்டே!
அறங்கள் புறம்பட நடப்போர்கள்
==ஆட்சியில் இனியுமே வரமாட்டார்!
திறங்கள் திருடவே எனுமெண்ணம்
==திரும்ப எவருளும் தோன்றாதே!
விறகென வாழ்பவர் பிறர்துயரை
==விலக்கித் தவிர்த்திட எழுவாரே!
மறலிக் கவன்தொழில் கடினமெனும்
==மாற்றத் தொடுவரும் புத்தாண்டே!
உப்புநீர் கண்கள் வடிக்காதே!
==உணர்வினில் ஏக்கம் இருக்காதே!
தப்பெதும் அறியா தினித்தோன்றும்
==தலைமுறை வந்து மகிழ்வாரே!
வெப்பமும் குளிரும் அதிகமிலா
==விரும்பும் இயற்கையைக் காண்போமே!
துப்பார்க் கினிதுப் பானவையே
==துப்பாக் கிடும்,இப் புத்தாண்டே!
======கலைக்கு அவரது ஒரு பாடலை அப்படியே மாற்றிப் போட்டு எழுதப்பட்ட கவிதை என்பதால் -நன்றிக் கடப்பாட்டுடன் -அவர் விரும்பும் ஒரு தலைப்பும் இதற்கு அணிசெய்கின்றது ;===========