பருவம் இரண்டு -- நான்காம் மரணம்
அவளிடம் நியாயம் இருந்ததை அவன்
ஏற்றாக வேண்டுமே அப்படியே ஏற்றான்
ஆனாலும் அவன் மனம் அடிப்பட்டிருந்தது
இருப்பினும் அதில் மனம் தெளிவுப்பட்டிருந்தது!
மீண்டும் நாட்கள் நகர ஆரம்பித்தது!
அவன் காதல் இன்னும் மாறவில்லை
அவள் போகும் இடமெல்லாம் தொடர்ந்தான்
ஆனால் அதை அவள் அறிந்திருக்கவில்லை!
அன்றொரு நாள் வழக்கமான அவனின் பின்தொடரல்
நான்குவழிச் சாலைத் திருப்பம் அது
திருப்பத்திலும் வேகம் குறையாத வாகனம்
கணநேரத்தில் அவள்மீது மோத இருந்ததை
குறுக்கில் புதுந்து தன்மீது வாங்கினான்!
இரத்த வெள்ளத்தில் மிதந்தான் சாலையில்
காலக் கண்ணாடி காட்சிகளை மாற்றிக்காட்டியது
மீண்டும் அவசர ஊர்தி, மருத்துவமனை,
உயிருக்குப் போராட்டம் தொடர்ந்தது!
அவனுக்கு உயிர்ப் போராட்டம்
அவளுக்கு மனப் போராட்டம்
தனக்கு அவனால் நேர்ந்தது அன்று
தன்னால் அவனுக்கு நேர்ந்தது இன்று!
இனியும் அவன்மீது கோபம் அர்த்தமில்லாதது!
இப்பொழுதும் அவள் உயிர் அவன் காத்தது
இதைவிட ஒரு பெண் ஆணிடம்
என்ன எதிர்பார்த்துவிடப் போகிறாள்
உயிர் காத்தவனுக்குத்தானே உயிர் சொந்தம்!
அவன் பிழைப்பது அத்தனை சாத்தியமானது
ஆம்! அவள் வேண்டுதல் சாத்தியமாக்கியது!
கண்ணாடி கதவின் வழியே பார்த்துவிட்டு
அவனின் வாழ்க்கையில் நுழைய நினைத்தாள்!
அவன் வீடு திரும்பினான்
இன்று கல்லூரியும் திரும்பினான்
அவள் அவனைப் பார்க்க வந்தாள்
தனியே சந்திக்க ஒரு வாய்ப்பு
கண்களின் இமைகள் மட்டும் சிமிட்டிக்கொள்ள
இருவரின் இதழ்களும் வார்த்தைகளை உதிர்க்கவில்லை
கண்கள் பொருந்தி வார்த்தையில்லா மொழிகள் பேசின
மௌனத்தின் ஆழம் அதிகரித்துக்கொண்டே போயின!
காதலை எவர் சொல்வது எவர் ஏற்பது
இங்கே ஒரு போட்டி நடக்கிறது!
உணர்வுகளின் உச்ச கட்ட ஓட்டம்
உலகத்தின் உச்சியில் நிற்பதுபோல் இருக்காதோ...?
மௌனம் கலைக்க அவள் முயன்றாள்
அவளிடமிருந்து முதல் வார்த்தை வெளிப்படுமுன்
ஓடோடி வந்த அவளின் தோழி
கொண்டு வந்த அந்தத் துக்கச் செய்தி
அவளை வாய்திறந்து கதறி அழச்செய்தது!
ஆம் அவளின் அன்னை இறந்துவிட்டாள்
அவளும் அங்கிருந்து உடனே விலகினாள்
விலகுமுன் ஒரு அதீத பார்வையுடன்
காதலியிடமிருந்து காதலைக் கேட்கத் தயாரான
அவனுக்கு அவளின் கண்ணீரும் கவலையும்
சூழ்நிலையின் அடுத்த நொடி மாற்றமும்
அவனின் உணர்வுகளைக் கொன்றதோடு
நான்காம் மரணத்தைக் கொடுத்தது!