உன்னை வாழ்த்தி பாடுகிறேன் - குமரி பையன்

அன்று..
ஆரம்ப பள்ளியில் உன்னைவிட்டு
அழுகையோடு நீ என்னைத்தொட்டு
சினத்தோடு நானும் கையை விட்டு
சிந்திவிட்டு வந்தேன் தள்ளி விட்டு..!
இன்று..
பொறுப்பை போக்கி இல்லமொன்றில்
பொறுப்பாய் எனை நீ விட்டபோது
பொங்கும் என் மன குமுறல் விட்டு
போனாயே என் செல்ல மகனே..!
ஆரம்ப இல்லத்தில் உனை விட்டதற்க்கு
அநாதையாக எனை போட்டு விட்டாய்..!
அன்று..
உன் கல்விக்காய் நல்பள்ளியை நாடினேன்
உன் கல்விதரம் சிறக்க அலைந்து தேடினேன்
முன் குறை கண்டு உன்னோடு சாடினேன்
முதல்தரத்தில் வெல்ல ஆனந்தம் பாடினேன்..!!
இன்று..
என் சுமை இறக்க பலநாள் அலைந்தாயே
என் தரத்துக்கு அக்கறையாய் சுழன்றாயே
முழு நிறைவாய் நீ இருக்க தவித்தாயே
முதல் தரம்தான் இங்கெனக்கு கொடுத்தாயே
நான் விட்டேன் மகனே நீ வென்று வந்தாய் ..!
நீ விட்டாய் மகனே நான் வெந்து வருவேன்...!
அன்று..
அருமை விடுதியில் விட்டு படித்த காலம்
அடிகடி பார்க்க வேண்டும் என்ற நேரம்
அலுவலின் நிமித்தம் உன் ஆசை துறந்தேன்
அப்போதும் அனுப்பிவைப்பேன் விடுதி பணம்..!
இன்று...
ஒருஆண்டு சென்ற பின்னும் வரவில்லையே
ஓயாத உன் பணிசுமைதான் நான் அறிவேன்
ஒரு முறையும் தவறாத தவணை தொகை
ஒழுங்காய் அனுப்புகிறாய் பெரும் மகிழ்ச்சி
என் உள்ளமும் ஏங்குதே உன்முகம் காண
எதிர்வினை இதுவென்று மனம் சொல்லுதே..!
அன்று...
சிறுவனாய்.. இளைஞனாய்.. கற்றறிந்தாய்
சிந்தையில் அனுபவம் சுற்றி வைத்தாய்
என் முதுமை பருவத்தில் இன்றெனக்காய்
எல்லாமே மொத்தமாய் செலவு செய்தாய்..!
இருக்குது மகனே ஓரு வேறுபாடு
இனிய வாழ்க்கை உனக்கு தந்தேன்
இதுதான் உறவுவென எனக்கு தந்தாய்
இதுபோல் உன்மகன் தேடவேண்டாம்
இங்கும் உனை வாழ்த்தியே பாடுகிறேன்..!
இன்றும் நீ என் செல்ல மகன் ஆனதால்..!
ஒரு தந்தையின் இதயம்
முதியோர் இல்லத்திலிருந்து..!