பாவம்
கோடைக்கால வெயில்
வறட்சியை வளர்த்துப் போகலாம்
இலையுதிர்ந்த மரக்கிளையில்
அமர்ந்த பறவைகளானது
வருத்தங்களைப் பாடிக்கொண்டிருக்கலாம்
எப்பொழுதும் நிழலைத் தரும்
அந்த மரமானது
தானும் பட்டுப் போவதை எண்ணி
என்னிடம் அழுது களைத்திருக்கலாம்
சேகரித்த சருகுகளுடன்
சுழன்றடித்து வரும் காற்றானது
வானுக்கும் பூமிக்குமாய்
குப்பையை நிறைத்துப் போகலாம்
ஆம். இது ஒரு கோடைக்காலம்.
இப்படித்தான் இருக்கும் எனினும்
கோடை அறிய வாய்ப்பில்லை
வசந்த காலம் வந்து
தன்னைத் துடைத்துச் செல்லும்
என்பதை
எக்காலத்தைப் பற்றியும்
கவலைப்படாத
எனக்கு முன்னால்
நீங்களும் நிற்கிறீர்கள்
சில விதைகளைப் பரிசளிக்க
தனிமைப்பட்ட கோடையை
ஏறெடுக்காமல்
நீங்களும் நானும்
தரிசு நிலங்களை
செம்மையாக்குவதில்
முனைப்பாகிறோம்
கானல் நீரைக் கண்ணீராய்
உதிர்த்துத் துவண்டு மறைகிறது
கோடை
திக்கற்று !