நம்பிக்கை
எந்த வசதியும் இல்லாத ஒரு கிராமம். ஒரு நாள் பள்ளி பயிலும் 15 வயது மாணவனைப் பாம்பு தீண்டிவிட்டது. நஞ்சு ஏறியது.
அவசரமாகப் பக்கத்து ஊரிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சரியான போக்குவரத்தும் இல்லை. பையனைத் தோள்மேல் தூக்கி வைத்துக் கொண்டு நான்கு பேர் மாறிமாறி சென்றனர்.
போகும் வழியில், நிலைமையைக் கண்ட சாமியார் ஒருவர் அவர்களிடம் பச்சிலை ஒன்றைக் கொடுத்தார். ""இதனைக் கடிபட்ட பையனின் கையில் வைத்து மூடிக் கொள்ளச் சொல்லுங்கள். அவனுக்கு முடியவில்லையானால் உங்களில் மூத்தவர் யாரேனும் ஒருவர் கையில் வைத்து மூடிக்கொள்ளுங்கள். பச்சிலை கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவமனை செல்லும் வரை நீங்கள் இதைக் கடைப்பிடித்தால், பையனுக்கு நஞ்சு மிகுதியாக ஏறாது. பிழைத்துக் கொள்வான்'' என்றார். அவர் சொன்னபடியே செய்துகொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். பையனும் மருத்துவம் முடிந்து பிழைத்துக் கொண்டான்.
திரும்பும் வழியில், பச்சிலை கொடுத்த சாமியாரிடம், ""அய்யா! இந்த மூலிகையின் மகத்துவமென்ன?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், ""ஒன்றுமில்லை. அது சாதாரண ஒரு செடியின் இலைதான். நமது மனத்தில் நம்பிக்கை ஏற்பட்டால் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். பயந்து போன உங்களுக்கு நம்பிக்கையைத் தரவே இலையைக் கொடுத்தேன். நீங்கள் நம்பினீர்கள். இதுபோல் எந்த ஒரு செயலிலும் அறிந்தோ அறியாமலோ நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை வெற்றியாகும்'' என்றார்.