எட்டடுக்கு மாளிகை
எட்டடுக்கு மாளிகையாம்,
கட்டித்தந்தான் கடவுளாம்
எட்டடுக்கும் கெட்டதோ
இத்துத்தான் பட்டதோ!
எட்டாவது அடுக்கு அது
எட்டாத உயரம் அது.
கட்டி ஆளும் பீடம் அது.
குட்டிச்சுவர் ஆனது`
ஏழாவது அடுக்கு அது
இதயம் எனும் கூடு அது`
வாழ வந்த கிளி பறந்து
போனதால் பாழானது.
கிளி பறந்து போனபின்னே
களையிழந்து போனதாலே
பேய் வாழும் மாளிகையாய்
பேரொழிந்தும் கெட்டதே!
ஆறாவது அடுக்கு அது
ஆக்க சக்திக் கூடம் அது.
தேறாமல் சோர்ந்ததாலே
பூராமும் தீர்ந்ததே!
ஐந்தாவது அடுக்கு அது.
ஆலைப்பணிக் கழிவு வழி.
நைந்து மூடி வேலையின்றி
விழுந்தது பேணாதாலே.
மற்ற மூன்றும் அடித்தளங்கள்
பற்றி நின்றும் தாங்காமல்
வற்றிக் காய்ந்த மரங்களாய்
கொட்டித்தான் வீழ்ந்ததே!
எட்டடுக்கு மாளிகையும்
இடிந்து தானே சாய்ந்ததோ!!
விட்டுப்போன ஒருத்தியால்
பட்டு அதும் மாய்ந்ததோ!
கொ.பெ.பி.அய்யா.