கனவல்ல நிஜம்
கனவு என்னவென்று சரியாக நினைவில்லை,
கனவில் தூங்கினேன் என்பது மட்டும் உண்மை,
தூங்கியதே கனவாக இருக்குமோ?!,
விடியும் தூரம் குறைந்துகொண்டு வந்தாலும்,
கனவின் நீளம் குறையவேயில்லை ,
கனவின் பாதையில் என்னை
வழிமறித்தது விழிப்பு,
கண்களின் சிவப்பு,
கண்ணீர் வெள்ளத்தின் தடயமாக,
அழுதது கனவிலா?
இதற்கு முன் நிஜத்தில் அழுததில்லையே?!,
என் தலையணை நல்ல தோழன்,
என்னோடு சேர்ந்து அழுதிருக்கிறான்,
அவனும் என் கனவில் அழுதானோ?!,
இருக்காது, நான் விழித்திருக்கிறேன்,
அவன் உடல் முழுதும் கண்ணீர் தடயங்கள்,
அவனிடமே கேட்டுவிடுவோம்,
எழுப்பினேன் அவனை,
என்னவளின் திருமண அழைப்பிதழை,
நெஞ்சில் புதைத்து அழுதிருக்கிறான் இரவெல்லாம்,
நிஜம் தான், அவளுக்கு இந்நேரம் சுபமுகூர்த்தம்!