கண்ணனும் ராதையும்

கானகத்தில் கசிந்து வந்த குழலோசை காதில் விழ,
காதலனைக் காண்பதற்காய் நடையெடுத்து ஓடினாள்;
தேடிவந்த கண்ணனை காணாது போனதால்,
பாடிவந்த ராகத்தை ராதையவள் நிறுத்தினாள்;
அடர்ந்து நின்ற புதர்களின் பின்னேசென்று நோக்கினாள்;
காணாத கண்ணனுக்காய் கண்ணில் நீர் தேக்கினாள்;
நடைகளைப்பு தாளாமல் நிழலொன்றில் பதுங்கினாள்,
ஞாயிறவன் மலைப்பதுங்க பயந்து விழி பிதுங்கினாள்;
சுற்றிச்சுற்றித் தேடிப்பார்த்தும் வழி நினைவு இல்லையே;
மந்திரமாய் உச்சரித்தாள் கண்ணன் என்ற சொல்லையே;
இருண்டுவிட்ட கானகத்தில் கயல்விழியாள் வருந்தினாள்;
கிளையசையும் ஒலிகேட்டு வேகமாகத் திரும்பினாள்;
அகலவிழி ஆந்தையொன்று தூரத்தில் கத்திட,
பின்னிருந்து கையிரண்டு இடைதன்னை பற்றிட,
பெண்மை கொண்ட நாணத்தால் பிடிவிலக்க முயன்றிட,
கண்ணனென்று கண்டுகொண்டாள் பற்றிய கை பார்த்திட;
உதறும்செயல் கைவிட்டு அடங்கிவிட்டாள் அவனணைப்பில்,
காற்றும் புக இயலவில்லை காதலரின் மெய்ப்பிணைப்பில்,
மரங்களதும் மலைகளதும் காவலுக்கு நின்றன;
நாணமுற்ற புள்ளினங்கள் மெள்ளப் பறந்து சென்றன.

எழுதியவர் : அ ஜோயல் சாம்ராஜ் (9-Jan-14, 7:57 pm)
சேர்த்தது : jeany
பார்வை : 80

மேலே