நான் மரிப்பதில்லை
செத்தபின்பு அழுவதற்கு
சொந்தமொன்று வேண்டுமென்று
வாழும்போது அழும்மனித சாதி -அதற்கு
விலக்காகும் கவிஞனவன் சேதி!
காலமெனும் ஆழியிலே
குமிழிஇந்த மானுடமே
அலையாவான் கவிஞனவன் மட்டும் -இது
ஆண்டவன் எழுதிவைத்த சட்டம்!
பிறப்புண்டு இறப்பில்லை
சிறப்போன்றே எனதெல்லை
குறிப்பின்று எழுதிவிட்டேன் கவியில் -வரும்
காலமிதை உரைக்குமடி புவியில்!
நாடிநரம் பத்தனையும்
ஓடிவிளை யாடுதமிழ்
கூடிவரச் செய்யுமடி நாட்டை -இவன்
புகழ்பாடி நிரப்புமடி ஏட்டை
தனிமரமாய் வாழ்வதேனும்
கனிமரமாய் வாழ்ந்திருப்பேன்
தமிழ்மரமாய்த் தழைத்திருப்பேன் உலகில் -வரும்
தலைமுறைகள் இளைப்பாறும்என் நிழலில்!
சூழ்நிலைதான் என்செய்யும்?
சூழ்வினைதான் என்செய்யும்?
ஊழ்வினையும் ஒதுங்குமடி கண்டு -அந்த
வலிமையிவன் தமிழுக்கே உண்டு!
விழுதுவிடத் தமிழ்விருட்ஷம்
எழுதிவிட வந்தவன்காண்
புழுதிபட மறைந்திடாத கவிஞன் -இவன்
புதிய பாரதிகளின் தலைவன்!
இவன்கொண்ட கர்வமிது
இவன்கொண்ட கர்வமன்று
தமிழ்கொண்ட ஆண்மைஎனக் கூறு -இது
தமிழன்னை எனக்களித்த சீரு!
கம்பனுடன் வள்ளுவனும்
இளங்கோவும் பாரதியும்
கண்ணனவன் தாசனென நீளும் -அந்த
வரிசையிலே வாழ்ந்திருப்பேன் நானும்!
சுற்றுமண்ட சராசரமாய்
சுழன்றுவிழ மானுடமே
பெற்றுவந்தேன் புலமைஎனும் சாட்டை -நான்
சாவதில்லை முத்தமிழின் கோட்டை!
-------------ரௌத்திரன்
(எழுத்து.காமில் இதுவே எனது இறுதிக் கவிதையாகும். இது வரை வெளியிட்ட ஏறக்குறைய 270 படைப்புகளில் 200 படைப்புகளை நீக்கிவிட்டுச் சிலவற்றை நீங்கள் எப்போதும் படிப்பதற்காக விட்டு வைத்திருக்கிறேன். என்னை வாழ்த்தியவர்களுக்கும் வசவு பொழிந்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். விடைபெறுகிறேன்...)