நீயும் நினைப்பாயோ
இளையவனே
என் இனிய பொன் மகனே
இதய வீணையை
இதமாய் மீட்டிய
இசைக் குயிலே
உன் சின்னச் சிரிப்புகளில்
எத்தனை நான் சிலிர்த்திருப்பேன்
உன் கொஞ்சும் குரல் அழைப்பில்
எப்படி நான் குளிர்ந்திருப்பேன்
உன் காலடிச் சத்தம் கேட்க
எத்தனை நாள் தவமிருந்தேன்
உன் அன்பான அணைப்பினிலே
எப்படி நான் உருகி நின்றேன்
உன்னுடைய களிப்பினிலே
எப்படி நான் மெய் மறந்தேன்
இத்தனை சந்தோசம்
எனக்கெதற்கு என நினைத்தா
என்னை விட்டு விட்டு
எங்கோ பறந்து சென்றாய் ?
உன்னை பிரிந்த துயர்
ஊமைக் கனவாக
உயிரை வதைக்கிறதே.
நினைவில் நிறுத்தி உன்னை
நெக்குருக நினைக்கும் என்னை
நிர்கதியாய் விட்டு விட்டு
நீ பிரிந்து போனதென்ன ?
எனைப் பிரிந்து போனவனே
எப்போது வருவாயோ
இப்போதும் எனை நினைத்து
ஏங்கி இருப்பாயோ ?