புலம்பெயர விரும்பாத புது நாடு
வரிகளில் அடங்குவனவோ
வாழ்வியல் இழந்த தமிழனின் வலிகள்
புரட்டுப் புராணங்களிலும் ஆங்கில விருப்பிலும்
அமிழ்ந்து நிறமிழந்தது அமிழ்தினம்
மெய் நிறமெடுத்து ஓவியம் தீட்ட
இறையாண்மை எதிரியாகிறேன்
மரபணு மாற்ற விதைகள், எரிகுழாய் பதிப்பு
காற்றுறிஞ்சும் திட்டம், அணுக்கரு உலை என
ஆய்வுக்கூட எலியாய் ஆனது நம்மினம்
முழுதும் அழித்தார்கள் முற்றம் இடித்தார்கள்
தொல்பொருள் ஆய்வைத் தடுத்தார்கள்
ஓங்கியழ உரிமையில்லை என்றார்கள்
முக்கல் முனகல் வெளிப்பட்டபோதும்
முதுகெலும்பு முறித்தார்கள்
நாடுகளாய், மாநிலங்களாய் இன்ன பிறவாய்
பிளவுபட்ட எம் பேரினமே ஒற்றுமையோடு எழுந்துவா
நமக்காய்க் காத்திருக்கிறது
மூலிகைகள் முலாம் பூசியிருக்கும் காற்று
கழிவுகளில்லா ஆறு, திறவுகோலில்லா வீடு
மதுவில்லாத குடி, வல்லுறவில்லா வாழ்வியல்
இவை யாவும் நிறைந்த
புலம்பெயரத் தேவையில்லா புது நாடு
தமிழனுக்கென்று தனிநாடு .
==ச.க.இரமேசு
12 சனவரி 2014