தையில் சிறக்கவே தமிழர் வாழ்வு
தையும் வந்து பிறந்ததுவே
தமிழர் வாழ்வு சிறந்திடவே,
ஐயம் ஏதும் இல்லையிங்கே
அனைவரும் ஒன்றாய் இணைந்தாலே,
பொய்யாம் பகட்டும் பிரிவினைகள்
பேதம் நமக்குள் வளர்த்ததைய்யா,
கொய்யும் கதிரில் நெல்மணிபோல்
கூடி வாழ்ந்தால் வளம்வருமே...!
இமயம் வென்ற தமிழினந்தான்
இன்று விட்டார் ஒற்றுமையை,
சமயம் பார்க்கும் அரசியலார்
சதியில் வீழ்ந்தது ஒற்றுமையே,
சமயம் இதுதான் சேர்ந்திடவே
சாதிக்க வேண்டும் உலகரங்கில்,
அமைதி என்பது பிணத்திற்கே
ஆர்த்தெழு இணைந்திடப் பொங்கலிட்டே...!
புதுநெல் அரிசியில் பொங்கலிட்டு
பழவகை கரும்பு மஞ்சளுடன்
கதிரவன் வரவில் படைத்திட்டே
காட்டும் நன்றிதான் பொங்கலென்போம்,
இதுபோல் உலகத் தமிழரெல்லாம்
இணைந்து ஒன்றாய்ச் செயல்பட்டே
புதுமை செய்வோம் பாரிலென
பொங்கலில் சபதம் ஏற்போமே...!
-செண்பக ஜெகதீசன்...
12 சனவரி 2014