தமிழரென்றே பெருமைகொள்

தமிழர் பெருமையை தரணிக்கு சொல்லுவோம் - தாய்
தமிழே அருமை உயிரென்று கொள்ளுவோம்
சங்கம் வைத்தே வளர்த்த செம்மொழி - யாதொரு
பங்கமும் இன்றியே பழகுவோம் தமிழை

வள்ளுவன் இளங்கோ கம்பன் பாரதி - தேனை
அள்ளிப் பருகினோர் அமர நிலை எய்தினோர்
காவியம் தொகைகள் காப்பியம் என்று - அழியா
ஓவிய பெண்ணவள் மொழிகளில் தமிழே

புலியை முறத்தால் துரத்திய பெண்மை - இந்த
புவியில் எங்கணும் இல்லா புதுமை
கங்கையை வென்றதும் கடாரம் கொண்டதும் - காலம்
கடந்தும் சொல்லும் தமிழரின் வீரம்

கரிகாற் சோழன் கட்டிய கல்லணை - மாமல்லன்
அரிதாய் படைத்த குடைவரை சிற்பம்
விண்ணை தொடுமொர் தஞ்சை கோவில் - யுக
விந்தைகள் அல்லவா தமிழரின் படைப்புகள்

சிலம்பம் சடுகுடு ஜல்லிக்கட்டு வர்மம் - தேகம்
சிலந்தி வலைபோல் பின்னிடும் மர்மம்
மயிலாட்டம் ஒயிலாட்டம் கரக ஆட்டம் - ஜீவ
உயிரோட்டம் கலைகளிலே வேறெங்கும் காணீரோ..?

பசுவிற்காய் மகவை தேரிலிட்ட மனுநீதி - கண்ணகி
பாதச் சலங்கைக்காய் உயிர் நீத்த நெடுஞ்செழியன்
நீதிநெறி வழுவாத நெறிமுறையே வாழ்க்கையென்று - மனித
ஆதியினம் வாழ்வதுதான் மானுடத்தின் அடையாளம்


--அருள்நிதி வ.பா .முருகானந்தன் B.Sc , MA ( Yoga)
14 சனவரி 2014

எழுதியவர் : வ.பா .முருகானந்தன் B.Sc , MA (14-Jan-14, 9:51 am)
பார்வை : 74

மேலே