ஆயா

என் தந்தையின் அம்மா..
கதை சொல்லி உறங்க வைத்ததில்லை,
அவளுக்கு சொந்த கதை மட்டுமே தெரியும்.
நெஞ்சோடு அணைத்து எனை உறங்க வைத்திருக்கிறாள். உறக்கத்தில் நான் உதைத்ததை கூட, சிரிப்போடு மறுநாள் பகிர்ந்திருக்கிறாள்..
உச்சியில் எண்ணெய் தேய்த்து தலை வாரும்போது, தேடி பிடிக்கும் பேன்களை எல்லாம் சில வார்த்தைகள் திட்டாமல் கொன்றதில்லை.
பற்களின் புயலைக்கரை, பக்குவமாய் கொடுத்த முத்தங்கள், பத்திரமாய் இருக்கிறது இன்று வரை என் கன்னத்தில்..
வியர்க்க வேலை செய்த உடல், வெள்ளை தோல் மாறாத உடல் அவளுக்கு...
தனக்கென கிடைத்த சிறு உணவையும், மடியில் கட்டி மறைத்து தரும் அன்பை , ஈடு கட்ட ஏதும் இல்லை..
அறுபதை தாண்டியும் சிறு நரையை தொடவில்லையே!
ரேகைகள் போல் படர்ந்த சுருக்கங்கள் உன் நேர்த்தியான அழகல்லவோ!
என்ன ஒரு வெட்கம் என் ஒவ்வொரு கிண்டலுக்கும்..
படிப்பரியாமல் பக்குவமாய் இருந்தவளே,
பத்திரமாய் இருக்கையிலே பட்டென விழுந்தாயே!!
மருத்துவம் தீண்டா உடலுனது , மரணம் தான் வேண்டுமென நினைத்தாயோ!
உன் மரணத்தின் வருகையை எங்கள் நாட்கணக்கில் சேர்த்தாயே!
ஊருக்கு வரும்போதெல்லாம் ...
என் செல்லமே என அணைப்பாயே, அந்த புன்னகையை இன்று எங்கு தேட?
வெயிலில் சுத்தாதே என அதட்டிய அக்கறையை எங்கு தேட?
"மத்தவங்க கூட பாத்து பழகு..."
"எங்க போனாலும் ஜாக்கிரதையா போ ...."
"நல்லா சாப்டு.."
"வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் "
எழுத முடியவில்லை இப்படி உன் ஒவ்வொரு அன்பையும்....
உன் குரல்வலை தாண்டி முந்திவந்த உளறல்கள், உணர்த்தியது உன் அத்தனை வார்த்தைகளையும், உன் மரணப்படுக்கையில்
என்னோடு பேசும்போது...
முன்பே தெரிந்ததனால் உன் மரணமன்று அழவில்லை..
மாலைகள் அணிவகுக்க ,
கதறல்கள் குவிந்திருக்க,
குளிர்ப்பெட்டியில் நீ இருந்தபோதும்,
சொட்டு நீர் வரவில்லை கண்களின் வழியே.....
தெரியவில்லை!
உன் மரணம் கூட என்னை கலங்க வைக்க கூடாதென நினைத்தாயோ!என்னவோ!!
எந்நேரமும் உன் நினைவு என்று பொய் சொல்ல வரவில்லை, ஆனால் என்னை விட்டு நீங்காமல் உன் நினைவு உள்ளதென நம்புகிறேன், உன்னை போல் ஒருவரை பார்க்கும்போதெல்லாம்....
உன் அன்பை நினைவில் கொண்டு நிறைவு எழுதுகிறேன்..
தாய் , தந்தை இன்றி எப்படி ஒரு குழந்தை வளரகூடாதோ! அதேபோல்
தாத்தா , பாட்டி இல்லாமலும் ஒரு குழந்தை வளரக்கூடாது....
வளரும் இந்த சமுதாயத்துக்கு இந்த வரமும் கொடு இறைவா...............................
இப்படிக்கு
என் பாட்டியின் அன்பு பெயரன்.....