கெஜ்ரிவாலின் கரையும் எதிர்காலம்
வளர்ந்து வரும் அரசியல் தலைவர்களில் கெஜ்ரிவாலை கொஞ்சம் ஞானமுள்ளவராக ஊடகங்கள் முன் வைத்தன. அவரது நடவடிக்கைகளும் அப்படித்தான் இருந்தன. டெல்லி அரசியலில் அவரது காய் நகர்த்தல்கள் மிக நுணுக்கமானவை. அவை கைமேல் பலனும் அளித்தன. அனால் காங்கிரஸுக்குள் அடங்கிப்போவார் என டெல்லி மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள். காங்கிரஸ் மேல் மக்களுக்கிருந்த கோபம் தான் ஆம் ஆத்மியின் வெற்றியாக அமைந்தது. சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டிருந்த தீப்பந்தச் சின்னம் துடைப்பத்தை ஒத்திருந்ததால் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் ஏறக்குறைய எட்டு தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்யாசத்தில் தோல்வியடைந்தனர். பாஜக முன்னிலை பெற்றது.
காங்கிரஸும் பாஜகவும் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பலமுள்ள எதிர் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என ரகசிய உடன்பாடு கொண்டுள்ளன, ஊழலாலும் மதவாதத்தாலும் மக்களை மாறிமாறி வஞ்சித்துள்ளன என்பவை உள்ளிட்ட கடுமையான விமர்சனங்களை இரண்டு தேசிய கட்சிகளுக்கும் எதிராக வைத்து டெல்லி அரசியலை வசமாக்கிய கெஜ்ரிவால், ஆட்சி அமைப்பதற்கு எடுத்துக்கொண்ட கால அவகாசத்தில் மிகப் பெரிய திரைமறைவு நிகழ்த்துகையை ஆற்றிவிட்டார். ராகுல், கெஜ்ரிவால், தூதுவர்கள் சிலர் இணைந்து நடத்திய வினைப்பாட்டில் ஒரு வகையில் ராகுல்தான் வெற்றி அடைந்திருக்கிறார்.
மேலதிக ஞானம் கொண்டவராகக் கருதப்படும் கெஜ்ரிவாலுக்கு மாநிலக் கட்சிகளை சுவீகரித்து வீழ்த்திய காங்கிரஸின் கடந்த கால நடவடிக்கைகள் நினைவுக்கு வராமல் போனதுதான் வியப்பாக இருக்கிறது. சமீபத்திய உதாரணமாக பிரஜா ராஜ்ஜியத்தை சொல்லலாம். ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டி மறைவிற்குப் பிறகான இடைவெளியை பயன்படுத்தி அதிர்வை ஏற்படுத்திய சிரஞ்சீவியால் நிலைகுலைந்தது ஆந்திர காங்கிரஸ். அதைத் திடப்படுத்த தேசிய காங்கிரஸ் அவரை சுவீகரித்து பிரஜா ராஜ்ஜியத்தை அழித்து தனக்கு புதிய எதிர் இயங்கியல் இல்லாமல் பார்த்துக்கொண்டது. தமிழ் மாநில காங்கிரஸ்க்கும் இதுதான் வரலாறு. இதை ஒத்ததுதான் தமிழக அரசியலின் சுவீகரத்தில் தேமுதிக சிக்குண்டு போனதும்.
இந்த நிலையில் காங்கிரஸுக்குள் ஆட்பட்டுப்போன ஆம் ஆத்மியின் எதிர்காலம் இருள் நிறைந்த பெருவெளியாகி இருக்கிறது. தவிர அன்னா ஹசாரேவின் தாக்குதலையும் அது சமாளித்தாக வேண்டும். அன்னா ஹசாரே தான் உருவாக்கிய பிம்பத்துடன் தன்னில் இருந்து விலகி அரசியலை முன்னெடுத்த கெஜ்ரிவாலின் வெற்றியை இன்னும் ஜீரணிக்க முடியாமல் தொடர்ந்து ஆம் ஆத்மியை விமர்சித்து வருகிறார். நடந்து முடிந்த உண்ணாவிரதத்திலும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் வசைக்கு உள்ளானார்கள். ஊழலுக்கு எதிராக கிளம்பிய ஹசாரே லோக்பால் மசோதா தாக்கலுக்கு பிறகு, அது பல ஓட்டைகளை உடையது என அறிந்திருந்தும் காங்கிரஸ்க்கு பாராட்டு பத்திரம் வாசிப்பது விந்தையாக இருந்தாலும் இந்திய அரசியலில் இந்த மாதிரியான பேரபத்தம் ஒன்றும் புதிதல்ல. ஹசாரேவுக்கு காங்கிரஸால் எழுதப்பட்ட புதுபுனைவைத் தொடர்ந்து ராகுலால் பின்னப்பட்ட வலையில் கெஜ்ரிவால் வீழ்ந்திருக்கிறார். ஒருவழியாக ராகுல் இருவரையும் சமாளித்துவிட்டார்.
மத்தியில் யார் ஆட்சியைப் பிடித்தாலும் டெல்லியில் பெரும்பான்மை இடங்களைப் பெறுபவர் தான் தொடர் அரசியலை எளிதாக செய்யமுடியும் என்பதை கடந்த காலங்கள் நிறையவே உணர்த்தியிருக்கின்றன. மேலும் தேசியக் கட்சிகளுக்கு டெல்லியின் தேர்தல் முடிவுகள் மானப் பிரச்சினையாகவும் கருதப்படுகின்றன. இதனை ராகுல் தெளிவாகவே உணர்ந்து ஆம் ஆத்மியை ஆட்சியில் அமர்த்திவிட்டார். அக்கட்சி ஆட்சி அமைத்தால்தான் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் கணிசமான உறுப்பினர்களைப் பெறமுடியும் என்னும் ராகுலின் நம்பிக்கை அவருக்கு வேண்டுமானால் சாதகமாக அமையலாம். ஆம் ஆத்மிக்கு அது கரைதலின் தொடக்கமாகவே அமையும். ஏனெனில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின்னான அக்கட்சியின் நடவடிக்கை மாற்றத்தை விரும்பிய மக்களை ஏமாற்றியது மட்டுமல்லாமல் ஆத்திரத்தையும் ஊட்டியிருக்கிறது. முகநூல், குறுஞ்செய்தி வழியாக மக்களிடம் கருத்துக் கேட்டதாகவும், 80 இருந்து 90 விழுக்காட்டு மக்கள் ஆட்சி அமைக்க விரும்பியதாகவும் கூறப்படுகிறது. மக்கள் கருத்துக்கேட்பின் நம்பகத் தன்மையை வரும் நாடாளுமன்றத் தேர்தல்தான் உறுதிப்படுத்தும். வாக்களித்து தேர்வுசெய்த உறுப்பினர்களைத் திரும்பப்பெறும் அதிகாரம் மக்களுக்குக் கிடைக்கும் வரை இது போன்ற கூத்துகள் அரங்கேறவே செய்யும்.