கனவுச் சுவடுகள் நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

கனவுச் சுவடுகள் !

நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !


அலைபேசி 9840368700 .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

சிவசத்தி பதிப்பகம்
4/131.இ .பி .காலனி ,ஐயர் பங்களா ,மதுரை .6250014.
விலை 50.

நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி துடிப்பு மிக்க இளைஞர் தமிழ் மீது பற்று மிக்கவர் .மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிழவநேரி என்ற கிராமத்தில் பிறந்து கவிதை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக தமிழ்க்கிழவன் போல அறிவார்ந்து ,சிந்தித்து கவிதை வடித்துள்ளார். நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தியின் இந்த நூலிற்கு அணிந்துரையை கவிதையாகவே வழங்கி உள்ள கவிதைமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்குகளில் என்னோடு கவிதை பாடி உள்ளார் . நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி அவர்களின் முதல் நூல் முத்தாப்பாக வந்துள்ளது .

முதற் கவிதை !

உன் பசித்த விழிகளே ..
நான் ரசித்த
முதற் கவிதை !

பசித்த வயிறு கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் இவரோ வித்தியாசமாக பசித்த விழிகள் என்கிறார் .

காதல் பிரிவின் வலியை வெறும் வார்த்தையால் உணர்த்திட முடியாது.உணர்ந்தவர்கள் மட்டுமே உணரும் வலியை உனர்த்தும் வரிகள் நன்று .

பிரிவின் வலி !

இதுவரை
இரண்டு முறைதான்
அழுதிருக்கிறேன்...
ஒன்று
நான்
பிறந்தபோது
இன்னொன்று
உன்னை
பிரிந்தபோது !

கவிஞர்கள் காதலை மட்டும் எழுதாமல் சமூக நோக்குடனும் எழுதுங்கள் என்று வைத்த வேண்டுகோள் மிக நன்று. அரசியல்வாதிகள் தேர்தலின் போது வறுமையை ஒழிப்பதாகச் சொல்லி வருகின்றனர் .வந்த பின் அவர்கள் வறுமையை ஒழித்துச் செழிப்பாகி விடுகின்றனர் .நாட்டில் உள்ள வறுமை மட்டும் ஒழியாமலே உள்ளது . அதனை உணர்த்தும் கவிதை ஒன்று மிக நன்று

எழுதாத தருணங்கள் !

கைக்குட்டை
துடைக்க மறந்த
கண்ணீரைக் கூட
கவிதை
துடைத்து விடுகிறது .

எழுதுங்கள் கவிஞர்களே
அம்பானிகள்
அதிகம் பூத்த
சுதந்திர இந்தியாவில்
எலிகளைத்
தின்று வாழும்
இந்திய ஏழைகள் குறித்து
கவிதை எழுதுங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி அவர்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் மிக இயல்பாக கிராமிய மொழியிலும் கவிதைகள் எழுதி உள்ளார் .

மரம் மனித குலத்தை வாழ்விக்கும் வரம் என்பதை உணர்த்தி எழுதியுள்ள கவிதை நன்று .

வரமாய் மரம் !
மரமாய் வரம் !

மரங்கள்
தென்றல் வீணையின் சுரங்கள்
காற்றின் கரங்கள் ..

உலகத்தின் உயிர்களுக்கெல்லாம்
உரங்கள் ..
மனிதா ..நீ
மரத்திடம்
பாடம் படி ..
மனிதா .
மரமெனும்
வீணையை வெட்டியெறியும்
உன்
விரல்களென்ன
விரைத்துப் போன
விரல்களா ?

ஒழுக்கத்தை வலியுறுத்தி புகைபிடிப்பது தீங்கு என்பதை உணர்த்தி எழுதியுள்ள கவிதை .

சிகரெட் சித்திரவதை !

நெருப்புத் துண்டால்
நெஞ்சைச் சுடும்
கொடுமைக்கு
முற்றுப் புள்ளி வை .

படிப்பது சுகம் வாசிப்பு சுகம் புத்தக அனுபவும் புத்துணர்வு தருவது. நூலின் அருமை உணர்த்தும் கவிதை அருமை .வித்தியாசமான சிந்தனை .

நூலகம் !

படி
அதுதான்
உனக்கு ஏணிப்படி...
சிறைப்பட்டுக் கிடக்கும்
உன்
தீய உணர்வுகளை
அறுத்தெறி ...
புத்தகமே உன் கைத்தறி
புதிதாய் எடுத்தெடுத்து ...

தமிழ் தமிழன் தமிழ்நாடு என்ற சொற்களைப் பயன்படுத்தாமலே தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்துள்ள திருக்குறளுக்கு இணையான ஒரு இலக்கியம் உலகில் வேறு இல்லை என்று உலகத் தமிழர் யாவரும் மார் தட்டி கொள்ள வைத்தது , உலகப் பொது மறையான ஒப்பற்ற திருக்குறள் பற்றி வடித்த கவிதை நன்று .

புரட்சிப் புதையல் !

திருக்குறள் ..
இது இரண்டு வரி
இலக்கியம் ..
வள்ளுவன்
வடித்து வைத்த
வாழ்க்கைப் பெட்டகம் ..
தீர்க்க முடியாதவைகளுக்கு கூட
தீர்வுகளுண்டு
திருக்குறளில் !

காதல் உற்சவம் கவிதையில் காதலன் காதலி இருவர் கூற்றாகவும் கவிதை வடித்துள்ளார் .

சாதரணமானவனையும் சாதனையாளன் ஆக்கும் , புயலையும் தென்றாலாக்கும் வித்தைக் கற்ற வாழ்க்கைத் துணையான மனைவிக்கும் ஒரு கவிதை எழுதி உள்ளார் .

என் இல்லத்தரிசிக்கு ..
இதுநாள் வரையில்
நான் தனிமரம் .
இன்று முதல் என்னில்
" சிவசக்தி " எனும் கனி வரும் .

உன்னை
பார்த்துக் கொண்டே
இருக்கச் சொன்னால்
என்னால்
பட்டினி கிடக்கவும் முடியும் .

வங்கியில் பனி புரிந்து கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு கவிதை எழுதுவது .ச்ன்னையில் நடக்கும் முக்கிய இலக்கிய விழாக்களில் பங்குபெறுவது என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் தம்பி
நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி அவர்களுக்கு பாராட்டுக்கள் .இன்னும் பல நூல்கள் வடிக்க வாழ்த்துக்கள்

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (14-Jan-14, 8:36 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 77

மேலே