யாரும் கேட்காதுபோன பாடல்களிலொன்று

.வன்மத்தின் அதிபயங்கரங்களோடு
கடக்கவேண்டியிருக்கிறது
அன்மிக்கிற இரவை
பகல் என்றால் பேய்களுக்கு பயம் நடக்க
அதுதான் கால்களை களற்றி வைத்து விட்டு
இருளில் அசைகின்றன
சிறகுடைந்த பறவைகளை துரத்தியபடி

நிசியில் அலையும் கொள்ளிப் பிசாசுகளுக்கு
கண்களில்லை,மனசில்லை
மொத்தத்தில் சொல்வதென்றால்;
‘குறி’யொன்றை தவிர எதுவுமில்லை

பீறிடும் வீரியம் வடிய
தொங்கும் நாக்குடன் கட்டாக் காலிகளாய்
ஊர் மேய்கின்றன அது பல முகங்களுடன்
எனது மண்ணெங்கும் ‘உறுதி’எடுத்தபடி



வேப்பிலையை விசிறி
சாமியாடுகிரவனுக்கு தெரியும்
பேய்களின் வசிப்பிடம். ஆயினும்;
அவன் விரும்புவதில்லை ஓட்டிவிட
நேர்ச்சைகளால் பைகளை நிரப்பும்
முனைப்பு மேலோங்க
பேய்களை வளர்ப்பதெப்படியென்று
கனவுகளில் மிதக்கிறான்

நிற்கதியின் இறுதி விளிம்பில்
ஊசலாடுகிறது மனசு
உள்ளே புரண்டுகொண்டிருக்கும்
தசைப்பிண்டம் உயிருடன் வெளிவர
என்னை விழுங்க காத்திருக்கிறது ஊரின் வாய்
இதே பொருளுடன் கூடிய
விமோசனமற்றதான
வாழ்வின் இருத்தலை மொழிந்து
என்னுடையதான உறவொன்றில்
எவரோ ஒருவரின் குரல் தினம்
ஒலித்தபடிதான் இருக்கிறது
கேட்க யாருமற்ற தெருவிலிருந்து...


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (16-Jan-14, 8:32 pm)
பார்வை : 118

மேலே