கைநாட்டுக் கவிதைகள் 1
தூரத்து அடையாளங்களோடு.....
சொளையா
இருநூத்தம்பதை
எடுத்துக் கொடுத்து
பிலிப்ஸ் ரேடியோ பெட்டி
வாங்கியாந்தேன்!
சுட்சை போட்டா
'ஆல் இந்தியா
ரேடியோ'ங்குது!
பட்டணத்துக்காரங்களுக்கு
ஏமாத்துறதே
பொழப்பாப் போச்சு!
அவ்வப்போது
அறியாமையால்
அலுத்துக்
கொள்ளும் குமுறல்!
'மண்ணும் மழையும்
எங்கள் மலையே'ன்னு
பாரதியார் சொன்னாரு'ன்னு!
பட்டிமன்றத்துல
நடுப்பால ஒக்கார்றவரு
எடுத்துச் சொல்ல....
அவரு சொன்னா
போதுங்களா?
நம்ம தாசில்தாரு
சொல்ல வேணாமா?
இப்படி ஒரு எதிர்கேள்வி!
'பாராளுமன்றம்
இன்று
ஒத்தி வைக்கப்பட்டது'ன்னு
சேதி கேட்டதும்,
அடப்பாவிகளா
பாராளுமன்றத்தையும்
ஒத்தி வச்சுட்டாங்களா?
இனி எப்ப திருப்புவானுக?
ஒரு நையாண்டி!
இப்படி அறியாமையை
நேர்மைக்குள்
நெறச்சு வச்சிருக்கிற
இவர்களுக்கு
நாடு இட்ட பெயர்
பத்தாம் பசலி,
படிப்பறிவில்லாதவன்,
ஏதுமறியாதவன்,
பட்டிக்காட்டான்,
'கைநாட்டு'....
இப்படி
ஏளனத்தோடு கூடிய
புனைப் பெயர்கள்
ஏராளமாய்
உண்டுதான்!
ஆனால்....
அழகான மலர்களை,
சுவைமிகு கனிகளை,
வேலைபாடுகளுக்கான
விலைமிகு மரங்களை,
அள்ளித் தருவதற்கு
ஆதாரமாகும் அடி வேர்களோ
மண்ணுக்குள் மட்டுமே
மறைந்து கிடப்பதுபோல...
இந்த கைநாட்டு
மனிதர்களுக்குள்ளும்
மௌனமாய் மறைந்து கிடக்கும்
மகோன்னதங்கள் ஏராளம்!
பெத்த புள்ளையானாலும்
தோளுக்கு மிஞ்சிட்டான்ல....
இப்படி ஆணாதிக்கத்தை
ஆமோதிக்கும் நடப்புகள்...
ஆயிரம் இருந்தாலும்
பொட்டப் புள்ளைய
எப்படி கைநீட்டி அடிக்கலாம்
பேடிப் பயலே
இப்படி பெண்ணுரிமைக்கு
முன்னுரிமை பேசும்
வாழ்வியல் முறைகள்
வீரம் சோதிக்கும்
இளவட்டக் கல்....
கன்னியை
அடைவதற்கு முன்
காளைகளோடு
வெள்ளோட்டம் பார்க்கும்
மஞ்சு விரட்டு
கொள்கை விளக்கும்
வெள்ளை வேட்டி
இடுப்பில் அரைஞான் கயிறு
அதில் தொடுத்துக் கிடக்கும்
முள்வாங்கி
வீரத்தின்
அளவு சொல்லும்
தராசு முள்ளாய்
தமிழ் மீசை
சிங்கத்தின்
பிடரிபோல
கோதி விடும் அளவில்
பின் வளர்ந்து
கிடக்கும் குடுமி
கொசுவம்
வைத்த சேலை
காதுகளை
கட்டி இழுக்கும்
தண்டட்டி
'பொட்டப்புள்ள
வருகுதுப்போய்'
என எச்சரிக்கை
ஒலி எழுப்பும்
கால் அணிந்த
கொலுசுகள்
பூச்சூடிய கூந்தல்
மருதாணியில் தோய்ந்த விரல்கள்
இன்னும் இன்னுமாய்....
தொலைந்துபோன
தமிழனின்
தூரத்து அடையாளங்களை,
இன்றும் சுமந்து கொண்டு.....
கட்டை விரலில்
கட்டை வண்டி
மசியை அப்பி
மானசீகமாய்
தன் பெயரை
பதிக்கும் இந்த
கைநாட்டு
மனிதர்களுக்குள்
வேரூன்றி நிற்கும்
நேர்மை,
நேசம்,
மரபுகள்....
குழைந்து விடாது
விளைந்து கிடக்கும்
கலாச்சாரம், பண்பாடு
வாழ்வியல் நம்பிக்கைகள்
அனைத்தையும்
அருகிலிருந்து
கண்டவன்,
அவர்களோடு வாழ்ந்து
உணர்ந்தவன்
என்ற முறையிலும்.....
பக்கமிருந்து
மிச்சமில்லாமல் - நான்
பதிவு செய்தவற்றை
'பாக்யா'வின்
பக்கங்களில்
இறக்கி வைக்கப்
போகிறேன்
வாழ்க்கை
அவர்களுடையது
வார்த்தைகள்
தமிழுக்கானது
வாசிக்கப்போவதோ
வாசகர்களாகிய
நீங்கள்....
இதில்
என் பங்கென்பது
நான் சேமித்ததை,
நான் சுகமாய் சுமந்ததை,
பத்தாம் மாசத்தில்
சுகப் பிரசவத்தில்
பிள்ளையை
இறக்கி வைக்கப் போகும்
தலைப் பிரசவக்காரிக்கான
திருப்தி மட்டும்தான்!
என் கைநாட்டுக்
கதாபாத்திரங்களை
நீங்கள் வாசிக்கத்
தொடங்கியதுமே
'அட
எங்க ஊரிலும்
இதேபோல
ஒருவர் இருந்தார்!'
என்று உங்க உதடுகள்
நிச்சயமாய் முணுமுணுக்கும்!
ஏனெனில்,
நானும், நீங்களும்
சேர்ந்தே பார்த்திருந்தாலும்....
மகாமகத்திற்குப் போய்
குளித்துவிட்டு
வருபவர்களுக்கு மத்தியில்
கூடவே பத்து லிட்டர்
தீர்த்தத்தை
பத்திரமாய்
அடித்துப் பிடித்து
கொண்டுவந்து,
தன் மொத்தத்
தெருவுக்கும்
தீர்த்தம் வழங்கும்
தீர்த்தவாரிகளைப்போல....
நம்மைக் கடந்தவர்களை
நம்மைக் கவர்ந்தவர்களை
நான் பார்த்து
பத்திரப் படுத்தியதை
இங்கே பந்திக்கு
வைக்கிறேன்!
பருகுங்கள் நண்பர்களே!
நன்றி!