யாரும் கவிஞர் ஆகலாம்

கவிஞர் ஆகுதல் என்பது ஒன்றும் கடினம் இல்லை...
இலக்கிய இலக்கணங்கள் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் கூட இல்லை....
சிலப்பதிகாரம் ராமாயணம் நாச்சியார் திருமொழி எதுவும் தேவை இல்லை.....
எதுகை மோனை அழகியலும்....
மொழி சார்ந்த அறிவியலும் ....
எந்த வகையிலும் தேவை இல்லை.....

ஒரு நான்கு குணங்கள் இருந்து விட்டால் போதும்....வேறு எதுவும் தேவை இல்லை....
1)குழந்தைத்தனம்....
2)காதல்
3)சமூக நலம்
4)இயற்கை நலம்..

இந்த நான்கு குணங்களும் இருந்து தமிழ்ப்பற்றும் இருந்து விட்டால்....யாரும் கவிஞர் தான்.....

ஒரு நாள் என் வீட்டில்.....
பக்கத்து வீட்டு சிறுவனோடு விளையாடிய போது...
பூந்தொட்டி உடைந்து விட்டது....
அந்த சிறுவன் வேகவேகமாய் துடிப்புடன் அந்த பூக்களை அள்ளிப் போய் தண்ணீரில் போட்டான்.எதற்கு அப்படி செய்தான் என கேட்ட போது...
"என் வீட்டில் மீன் தொட்டி உடைந்த போது விழுந்த மீன்களெல்லாம் அம்மா உடனே தண்ணீரில் போட்டாள்..மீன்கள் பிழைத்தன...அதனால் தான் பூக்களை தண்ணீரில் போட்டேன்" என்றான்.அவன் என்னையும் சிறுவனாகவே மாற்றியதை உணர்ந்தேன் நான்....அதை ஒரு கவிதையாக்கினேன் இப்படி....

"மீன் தொட்டி உடைந்து....
விழுந்த மீன்களிலும்.....
பூந்தொட்டி உடைந்து ...
விழுந்த பூக்களிலும்...

துடித்தது என் இதயம்!.

அதே போல் ஒரு காட்சி கொண்ட படம் வலைதளத்தில் என் கண்ணில் பட்டது....
அப்போது என் மனம் வேறொரு கவிதையை தந்தது.....ஒரு காதலன் உணருவதாய்...

" யார் என் இதய ஜாடியை உடைத்தது....
விழுந்து கிடக்கின்றன பார்....
உனக்கான என் கவிதைகள்....!"


இதே காட்சியை சமூக நோக்கோடு எழுத முயல....
இப்படி உருமாறிப் போனது அந்த காட்சி...

"உடைந்தது !.....
இத்தனை நாளாய்
கட்டி வைத்திருந்த
ஜாதிக் குடுவை !...
சுதந்திரமாய் மலர்கள் !.. "

இதே காட்சியை இயற்கையை நேசிப்பவனாய் யோசித்த போது....

"மலர்கள் சாவது பொறுக்காமல்....
தன்னை தானே ...
உடைத்து கொண்டதோ....
பூந்தொட்டி..!"

இப்படி ஒரு காட்சி பல பரிமாணங்கள் எடுக்கும்....
மேற்சொன்ன நான்கு குணங்களும் இருந்து விட்டால்......
மூளைக்குள் மின்சாரம் குரல் கொடுக்கும்....
அதை உணர்ந்து விட்டாலே யாரும் கவிஞர் தான்....
வார்த்தைகளில் உணர்த்த தெரியாவிட்டாலும்....
உணர முடிதலே கவிதைக்கான ஆரம்பம்....

எழுதியவர் : (18-Jan-14, 10:48 am)
பார்வை : 223

மேலே