ஞானமடா நீயெனக்கு 13

நீ எட்டி எட்டி
உதைத்துக் கொண்டிருந்த
எத்தனையோ நாட்களின் -
என் தூக்கம் உன் காலடியில் தான்
இமைகிழிந்துக் கிடந்தது!!
நீ சாப்பிட்டு வைத்த
மிச்சத்தை எடுத்துக் கொண்டு
உடம்பெல்லாம் ஓடியது
என் ரத்தம்!
உனையும்
பாப்பாவையும் மாற்றி மாற்றி
கொஞ்சுவோம்,
உனக்குத் தெரியாமல் அவளிடமும்
அவளுக்குத் தெரியாமல் உன்னிடம்
பாசத்தை நிறைக்கையில் - நீ
எதிர்பார்த்த உனக்கு மட்டுமான அன்பு
கிடைப்பதாய் நம்பினாய்,
உனக்கும் பாப்பாவிற்கும்
இப்படி மறைந்து மறைந்து காட்டிய அன்பில்
உங்களின் குழந்தைப்பருவ மனசு -
கோணக் கூடாதே என்ற அக்கறையில்
என்னம்மா என்னப்பா
என்னை மட்டும் பிடிக்கும் என்றதன் அர்த்தம்
இப்போது புரிந்தது!!
உனக்கு பாப்பா என்றால்
அத்தனை பிரியம்,
நீ என்னை மாதிரியே போல்
என்று நினைத்துக் கொள்வேன்,
ஆனால் நான் திரும்பும் போது
மறைவாக சென்று நீ அவளை
அடித்துவிடுகிறாய்,
நானும் ஒருவேளை
உன்னைப்போல் தானோ என்று
யோசிக்கத் துவங்கினேன்!!
எப்பொழுது தூங்குவாய்
எப்பொழுது எழுந்திருப்பாய்
என்ன சாப்பிட்டாய் தெரியவில்லை;
உன் அவ்வப்பொழுதிற்கான அசைவில்
தூங்குகிறாய்
சாப்பிடுகிறாய்
நாளைய என் தலைமுறைக்கான உயிர்ப்பை
இன்றிற்குமாய் என் கர்ப்ப வயிற்றின் சுவற்றில்
எழுதிக் கொண்டிருக்கிறாய் என்பது மட்டும்புரிந்தது!!

எழுதியவர் : (19-Jan-14, 8:50 am)
பார்வை : 78

மேலே