ஞானமடா நீயெனக்கு 12

நீ மூத்தவன் ஆனதையும்
நாங்கள் இரண்டாம் முறையாய் -
பெற்றோர் ஆனதையும் -
இன்று தெரிந்துக் கொண்டு
அவள் வயிற்றில் கை வைத்து -
செல்லமே நல்லா இருக்கீங்களா......... என்று
புன்னகைத்ததும் - நீ
இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்துவிட்டு
உனை கொஞ்சும் அந்த வார்த்தையில் - நான்
யாரை கொஞ்சுகிறேனோ என்று பார்த்து விட்டு
நான் வயிற்றில் இருக்கும் கையை எடுத்து - உனை
தூக்கிக் கொள்வதற்குள் -
நீ பரிதாபமாய் அவளின் வயிற்றையே பார்க்கிறாய்
நாங்கள் கவனமாக இருப்பதற்கான
எக்-கண்ணிலும் சுண்ணாம்பு வைக்காததற்கான - எச்சரிக்கை
இதோ இந்த உன் பார்வையிலிருந்து பிறக்கிறது!
அது எப்படியோ -
மூத்த பிள்ளை
இளைய பிள்ளையால்
சலித்துவிடும் என்கிறார்கள்
எனக்கு நூற்றியோர்
பிள்ளைகள் பிறந்தாலும்,
நீயும் சலிக்கமாட்டாய் -
மீதம் -
நூறு பிள்ளைகளையும் சலிக்கவிட மாட்டாய்'
என்று தெரியும்!
ஒவ்வொரு பிள்ளை பெற்ற வயிறும்
வளர்த்த தோளும்
தன் குழந்தைக்கான அன்பையும்
ஆசைகளையும்
எழுதிவைக்க நாட்குறிப்பினைத் தேடுவதில்லை;
தேடி வைத்திருந்தால் -
ஒவ்வொரு வீட்டிலும்
ஞானமடா நீயெனக்கும் -
ஞானமடி நீயெனக்கும் -
நிறைய கனத்திருக்கும்!
உன் நெடுந்தூர பயணத்தில்
உனை போல் ஒரு பூ -
உன் வீட்டிலும் பூக்கும்
அன்று -
அதற்கு நீ தரும் நிறைய முத்தங்களில்
ஒன்றிலாவது நிறைந்திருக்கும் -
நானுனக்கு கொடுக்கும்
நிறைய முத்தங்களின் அன்பு!

எழுதியவர் : (19-Jan-14, 8:48 am)
பார்வை : 36

மேலே