ஞானமடா நீயெனக்கு 14

சிலநேரம் நீ
வயிற்றிற்குள் அசைவதே
இல்லை,
பதறிப் போவேன்..
சூடாக ஏதேனும் குடி அசையும் என்பார் அம்மா.,
சூடு ஒருவேளை உனக்கு பட்டுவிடுமோ என்று அஞ்சி
யாருமில்லா அறைக்கு சென்று
வயிற்றில் கை வைத்து
ஏய்....... என்ன செய்கிறாய் அப்பாவிடம்
சொல்லவா என்பேன்,
எட்டி............ ஒரு உதை விடுவாய் நீ
எனக்குத் தான் சுளீர் என்று வலிக்கும்!!
அவ்வப்பொழுது
வயிற்றில் கீறியது போல்
சுள்..ளென்று வலிக்கும்,
வெளியே வந்ததும் உனக்கு
முதலில் நகத்தை வெட்டிவிடவேண்டும் என்று
எண்ணிக் கொள்வேன்..
நகத்தை நினைத்ததும்
விரல் எப்படி இருக்குமோ
கை கால் முகம் எப்படி இருக்குமோ..
என்னவெல்லாம் செய்வாயோ
எப்படியெல்லாம் பேசுவாயோ என
உன் கனவுகள் - நீ வரும்
நாளுக்காய் நீளும்
நீ மீண்டும் எட்டி ஒரு
உதை விடுவாய்
நகம் வைத்து வயிற்றில் கீறுவாய்
வயிற்றை பிடித்துக் கொண்டு
சுருண்டு படுத்துக் கொள்வேன்
அந்த படுத்திருந்த நாட்கள்
பெற்றபின் -
பெற்ற குழந்தைகளுக்கு
அத்தனை ஒன்றும் பெரிதாகத் தெரிவதில்லை!!
உனக்கு எண்ணெய் தேய்த்து
உடம்பு குளிப்பாட்டி
உடம்பு துடைத்து
மருந்து ஊற்றி
நீ அழுகையை நிறுத்துவதற்குள் -
யாருக்கும் தெரியாமல் தினம் தினம் வந்து
என் காதுகளில் அடைத்துக் கொள்கிறது -
உன் வீல் என்று அலறும் அந்த உன்
அழுகையை பொறுத்துக் கொள்ள முடியாத
அந்த பிரபஞ்சம் குடித்துவிடும் வலி!!
இரண்டு குழந்தை வைத்து
அல்லல் படுகிறாயே
ஒரு ஆயா வைத்துக் கொள்
நன்றாக பார்த்துக் கொள்வாள்
என்றார்கள்
நானும் வைத்தேன்
அவள், நீ ஓவென்று கத்தியழ
ஏன் பிடாரி இப்படி கத்துறியே என்று சொல்லி
நறுக்கென உன் தொடையில் கிள்ளினாள்
நீ துடித்து அழுதாய் -
நான் அவளை பளார் பளாரென நான்கு
அரை விட எண்ணி கோபமுற்று அடக்கிக் கொண்டு
உனை வாழ்விற்குமாய் சுமக்க
எனைத் தயாராக்கிக் கொண்டேன்
அவள் அந்த நொடியில் இருந்தே
சம்பளத்தோடு நிறுத்தப்பட்டாள்!!
மூன்று மாதம் தான் ஆகிறது பிறந்து
அப்பா பார் என்றதும் -
திரும்பிப் பார்த்தாய்..
எனக்கு ஒரு முப்பது
வருடம் தாண்டி போயிற்று சிந்தனை
அன்று 'அப்பா பார்' என்று சொன்னால்
பார்க்க -
உன் கணவன் சிலவேளை சம்மதம் தர வேண்டியிருக்கும்!!

எழுதியவர் : (19-Jan-14, 8:51 am)
பார்வை : 45

மேலே