எழுத்தாளர் தந்தை மகனுக்கு
எழுத்தாளர் பற்றி சொல்ல
எவ்வளவோ உண்டு
நல்லவையும் கெட்டவையுமாக!
பேனாவுக்கு
மை நிறைக்கச் சொன்னால்
மனதுக்கும் சேர்த்தே
சாக்கடை நிறைத்தவர்களின்
சல்லாப எழுத்துகள்,
வக்கிரத்தின் உக்கிரத்தில்
வடித்த வார்த்தைகள்
வாய் பிளந்து நிற்கும் - உன்
வாலிபம் தின்னப் பார்க்கும்.
மயங்கி விடாதே
மறந்தும் விழாதே
வாய்ப்பளித்தால்
வளைத்து விடும்
மென்று தீர்த்து விடும்
தின்று ஏப்பம் விடும்;
வாலிபம் செலவழி
வாழ்க்கையை வாங்குவதற்கு!
நல்ல எழுத்துகள்
அமைதியாய் இருக்கும்;
அருங்காட்சியகத்தில் இருக்கும்
அரியது போல,
நாம் தான் அவற்றைத் தேடிப்
பார்க்க வேண்டும்.
நாறிய எழுத்துகள்
நகர்வலம் வரும்
பிணங்களின் ஊர்வலம் போல
பிணங்களின் ஊர்வலம் என்றால்
பிறகு என்ன
எரிப்பது தானே?
நீ
எழுத்தாளன் ஆகிவிட்டால்
மனது முழுவதும் மானுடம் நிறை.
இருக்கின்ற வெற்றிடத்தில் - காற்று
இருந்து கொள்ள இடம் தந்தால்
இரும்புப் பீப்பாய்கள் கூட
மூழ்குவது இல்லை.
மானுடம் என்கிற காற்றை
மனது முழுவதும் நிறைத்தால்
துன்பக் கடலில் மூழ்காது
வரலாற்றுக் கரைக்கு
வந்து சேரலாம்.....