தலித் தந்தை மகனுக்கு
தலித்துகள்,
யுகத்தின் வெப்பத்தை
அகத்தில் தேக்கிய
அபலைகள் அவர்கள்
இழிசாதி யென்று
எவனோ செய்த
ஏற்பாட்டுக்குள் முடங்கியோரை
போர்ப்பரணி பாடி எழுப்பு
சில நேரம் சுவாசிக்க மட்டுமே
அனுமதிக்கப்பட்டவர்கள் - இன்னும்
வாசிக்கவோ, வசிக்கவோ
அனுமதி மறுக்கப்பட்டவர்கள்!
ஒரு காலம் இவர்கள்
உடுத்திக் கொள்ளவும்
உணவு கொள்ளவும்
காற்று மட்டுமே!
கால மாறுதலில் இவர்கள்
ஆலமரமாய் பரந்து வளரவில்லை
ஒட்டுத்துணி மட்டுமே
கட்டிக் கொள்ள
அனுமதிக்கப்பட்டவர்கள்!
இவர்கள்
பூமியைப் பறிகொடுத்த
பூர்வீகக் குடிகள்
பறிகொடுத்தவரின் பரிதவிப்பை
எப்படிச் சொல்ல?
காவு கொடுத்தவனுக்குத்தானே தெரியும்
கண்ரின் வலியும்
கவலையின் கனமும்
எரிப்பவனுக்கும் புதைப்பவனுக்கும்
என்ன தெரியும்?
எழுதுபவனும் படிப்பவனும்
எரிப்பவனும் புதைப்பவனுமே!
ஆயிரம் விடுவர் அறிக்கைகள்
ஆயினும் என்ன காகிதப் பூக்கள்
மணப்பதில்லையே!
எத்ததை விஞ்ஞானம்
எவ்வளவு வளர்ந்தாலும்
இன்னமும்
போட்டிபோட்டு பரவும்
காட்டுத் தீயாய்
சாதியும் மதமும்....
பற்றி எரியும் வனத்துக்குள்
பட்டுக் கொண்டால்
மான் என்ன? புலி என்ன?
மாண்டுதான் ஆக வேண்டும்!
அன்பைப் போதித்த மதமெல்லாம்
வம்பைப் போதித்தே
வளரத் துடிக்கிறது!
அடுக்கடுக்காய் சாதி
மேல் என்றும்
கீழ் என்றும்
இந்த அடுக்குகள்
பாறைகளால் ஆனதல்ல
பயங்கரப் புயலுக்கும்
அசையாதிருக்க - வெறும்
பஞ்சால் ஆன அடுக்கே.
பயங்கரப் புயல் அல்ல
பலத்த காற்றே போதும்
முதலில் பறப்பது
மேல் அடுக்கே
நம்மில் யார் அந்த
சமூகப் புயலை உருவாக்குவது?