ஒன்றுபடு வென்று எடு பொங்கல் கவிதை போட்டி

...................................................
கலிங்கம் வென்று கடாரம் கொண்டான்
கல்லணை கட்டிக் காவிரி ஆண்டான் !
தமிழன் என்பது பழங்கதையாக ..

ஈகை அன்பு மானமிழந்து ..
ஆங்கிலம் என்னும் எச்சில் வடித்து ..
அயலான் காலைக் கழுவிக் குடித்து
ஊனைப் பெருக்கி உடலை வளர்த்து
வாழ்வதென்பதே வாடிக்கையாக ..

பழமை மறந்து பெருமையிழந்து ..
பக்கத்துக்கு வீட்டுப் பகையை வளர்த்து
ஒற்றுமையின்றி சிதறிக் கிடக்கும் என் ..

தன்னிகரில்லாத் தமிழினமே நீயில்லா ..
நாடில்லை உனக்கென்று ஓர் நாடில்லை
காரணம் உனக்குள் ஒற்றுமையில்லை !

முப்படை கண்ட தலைமகனை ..
முப்பது ஆண்டுகள் தவிக்கவிட்டாய்
முள்ளிவாய்க்காலில் தொலைத்து விட்டாய்
ஈழத் தமிழனை ஈனத் தமிழன் ஆக்கிவிட்டாய் !

இனியும் நீ தாமதித்தால் காவிரி தடுக்கப்படும் ,
முல்லைப் பெரியாறு உடைக்கப்படும் உன்
வாழ்வாதாரம் பறிக்கப்படும் வாழ்விழந்தோர்
வரலாறாய் உன் வாழ்வு பொறிக்கப்படும் !
ஆகவே ஒன்றுபடு ! வென்று எடு !

எழுதியவர் : Niranmani 20-Jan-2014 (20-Jan-14, 11:42 pm)
பார்வை : 111

மேலே