வீரரின் விடுமுறை
![](https://eluthu.com/images/loading.gif)
“அனுமதி” என்ற சொல் (விடுமுறை உத்தரவு)
ஆயிரம் கதை சொல்லும்
நகம் கடித்தே
நாட்கள் நகர்த்தப்படும்
பாறையாய்க் கனத்த நெஞ்சு
பஞ்சு பஞ்சாய் உதிரும்
நாட்காட்டி இலைகளை
நாளிரண்டாய் கை பறிக்கும்
உறங்க மறுக்கும் விழிகளே உளியாகி
ஆசைச் சிற்பம் வடிக்கும்
சீருடையும் சினுங்கும்
புகை வண்டி நிலையம்
புதுமணப் பந்தலாகும்
புகை வண்டிக் கழிப்பறையில்
புனுகு வாசம் வீசும்
அலெக்ஸாண்டரின் பூசிபாலஸ் வாங்கி
அசுவமேத யாகம் செய்யும்
அப்போதைய மனசு
மிதவேக ரயில் மீது
மீசை வரைக் கோபம் வரும்
அதிவேக ரயிலை விட
ஆசை முன்னோடிச் செல்லும்
காகிதமாய் தெரியும்
காசும் பணமும்
அவிழ்த்து விட்ட பசுங்கன்றாய்
சன்னல் விட்டு வெளிவந்து
கண்கள் துள்ளும்
விழி வீழும் காட்சி யாவும்
விரும்பிக் காணும் காட்சியாகும்
பிற மாநிலத் தடங்களிலும்
பிரியமானவர் முகந்தேடும்
ஒவ்வொரு நாளிரவும்
முதலிரவுக்கு முதல்நாள் போலிருக்கும்
பள்ளி விட்ட பிள்ளைகள் போல்
இதயம்
நாலுகால் கொண்டோடும்
விடுமுறை என்பது
வழக்குச் சொல்
விடுதலை என்பதே
நேர் பொருள்