புறக்கணிப்பின் விசக் காற்று

திட்டமிட்ட சொற்களால் கீறிச்சுவைக்கும்
அநாதரவற்ற கவிதையின் குருதிகள்
உன் கால் தடங்களில் வழிந்தோடக்கூடும்
அநாதரவற்ற ஆன்மாக்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும்
துளிக் காலம் யுகக்கணக்கானது.
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
என் விரல்கள் தீண்டிய முதல் ஸ்பரிசம்
உன் நெற்றிப்பிறை
அந்தரங்கத்தின் ஆன்மா முதற் காதலை
உன்னிடம் பாட நினைக்க
செவிப்புலனற்ற
இருட்டுப் பூனையொன்றாய் என்னை உருட்டிச் செல்லுகிறாய்.
காதலுக்கான காமத்தின் அதிகாலையும்
காமத்துக்கான காதலின் அதிகாலையும்
கிழக்கில் விடிய
அநாதரவற்ற அன்பின் பாதைகளில்
விசா் பிடித்த நாயாய் புறக்கணிப்பை கக்கிப் போகிறாய்
எப்போது உணரக்கூடும் காமத்தை தாண்டிய
குப்பி விளக்கில்
ஒளிருமெனது காதல் பெரும் சோதியை .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (21-Jan-14, 3:40 pm)
பார்வை : 79

மேலே