வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் நூல் ஆசிரியர் கவிஞர் சு வைரகாந்த் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மனை எண் 23. சுந்தர் நகர் விரிவு ,அமைதிச் சோலை நகர் ,திருநகர் . மதுரை .625006.அலைபேசி 9626412729.
.
மதுரை திருநகரில் வசித்து வரும் நூல் ஆசிரியர் கவிஞர்
சு .வைரகாந்த் அவர்களின் இரண்டாவது படைப்பு இந்த நூல் .சிறு தொழில் அதிபர் ,நாடகக் கலைஞர் ,பக்திப் பாடல் ஆசிரியர் ,கவிஞர், எழுத்தாளர் என பன்முக ஆற்றலாளர் .அட்டைப்பட வடிவமைப்பு,
உள் அச்சு யாவும் மிக நன்று .

நூல் ஆசிரியர் சு .வைரகாந்த் அவர்கள் கவிஞர் என்பதால் சொல் நயத்துடன் , சொக்க வைக்கும் சொல் விளையாட்டுடன் வாழ்வியல் நெறி கற்பிக்கும் விதமாக புதிய பாணியில் , கல் வெட்டு வரிகள் வடித்துள்ளார் .இந்த நூல் படித்தால் வாசகர் மனதில் எழுச்சி பிறக்கும் என்று அறுதியிட்டு உறுதி கூறலாம் .நமக்குப் பிடித்த வரிகளை வாழ்வில் கடைப்பிடித்து நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். சாதிக்கலாம் .வளம் பெறலாம் .நலம் பெறலாம் .

உலகின் முதல் மொழியான தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ ' என்ற எழுத்தில் தொடங்கி ' வீ ' என்ற எழுத்து வரை மொத்தம் 120 பக்கங்கள் உள்ளன .அற்புதமாக எழுதி உள்ளார் .நூலில் உள்ள அனைத்து வரிகளும் பிடித்து இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .

அடக்கத்தை உடைக்கும் ஆடம்பரம் !
அமைதியான உறக்கம் அவசியம் !
அன்பில் உதிக்கும் அமைதி !

மனதில் சிந்தனை விதை விதைக்கும் கருத்துக்கள் உள்ளன .

அவநம்பிக்கையே தோல்விக்கு அடித்தளம் !
அவசரத்தில் நிதானம் இழக்காதீர்கள் !

ஆணவம் குற்றங்களின் உச்சமாய் !
ஆத்திரம் அழிவையே கொடுக்கும் !

அன்பின் பாசத்தை
நேசத்தால் உணருங்கள் !

அழுத்தமான நம்பிக்கையே
வெற்றிகளைத் தொடரும் !
.
கடைபிடித்து நடந்தால் வாழ்வில் சிறக்கலாம் .சாதனைகள் புரியலாம் .சரித்திரம் படிக்கலாம் . சொற்ச்சிக்கனத்துடன் சுவைபட எழுதி உள்ளார் .

சிரமங்கள் இல்லாத மனிதர்கள் அரிது !
சில நொடிகளில் முடிவுகள் மாறலாம் !
சினம் மனதை சிறை பிடிக்க விடாதீர்கள் !

உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறள் போல பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் எழுதி உள்ளார் .

ஆசையே அழிவுக்கு காரணம் என்ற புத்தரின் கருத்தை மாற்றி யோசித்து எழுதி உள்ளார் .

துன்பங்களைத் தவிர்க்க
ஆசைகளைக் குறையுங்கள் !

அச்சம் இல்லை .அச்சம் இல்லை .என்று பாடிய மகாகவி பாரதியின் வைர வரிகளை வழிமொழிந்தது நன்று .

நியாயம் சொல்வதற்கும்
மனதில் தைரியம் வேண்டும் !

சித்தர்களின் பாடல்கள் போலவும் பல கருத்துக்கள் எழுதி உள்ளார். தத்துவக் கருத்துகளும் நிறைய உள்ளன .

பணம் எல்லோருக்கும் தேவை !
அதற்காக குற்றம் செய்யாதே !

நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் அவர்கள் பல கோணங்களில் ஆழ்ந்து சிந்தித்து நூல் வடித்துள்ளார் .

முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்காதே !
முன்னேற்றத்திற்கு நீயே வைக்கும் கொல்லி !

முயற்சியால் வெற்றியைத் தோடு !
முனைங்காதெ கவலையை விடு !

ஒழுக்கத்தின் சிறப்பை உயர்வை நன்கு உணர்த்தி உள்ளார் .வைர வரிகளை எழுதுவதால் காரணப்பெயரோ வைரகாந்த் என்று என்னும் அளவிற்கு அற்புதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .

ஒழுக்கம் உணடாக்கும்
பொறுப்பும் கட்டுப்பாடும் !

ஒன்றுபடு வெற்றியை
எளிதில் தோடு !

ஒழுக்கம் உழைப்பை
உணர்த்தும் !

படிக்கும் அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக எளிய நடையில் இனிமையான சொற்களால் மனதில் பதியும்படி எழுதி உள்ளார் .இந்த நூலில் ஏராளமான கருத்துக்கள் இருந்தபோதும் ,நூல் படிக்கும் வாசகருக்கு ஏதாவது ஒரு கருத்துப் பிடித்து அதை கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் .

சிந்தனையாளர் வெ. இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் ஏராளமான கருத்துக்களை எழுதியும் , பேசியும் வருகிறார்கள் .எனக்கு அவர் சொன்ன ' இயங்கிக் கொண்டே இருங்கள் ' என்ற சொல்லை தாராக மந்திரமாகக் கொண்டு சோகம் ,கவலை எது வந்தபோதும் சோர்ந்து விடாமல் , இயங்கிக் கொண்டே இருக்கிறேன். இந்த நூலிலும் கடைபிடிக்க மந்திரச் சொற்கள் உள்ளன . நூல் ஆசிரியர் கவிஞர்
சு .வைரகாந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (22-Jan-14, 8:43 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 973

மேலே