பயணத்தின் பயணம்

நெருக்கடி மிகுந்த அந்த இடத்திலும் நான் தனிமையில் நின்று கொண்டிருந்தேன். நான் விடும் பெரு மூச்சுகள் எவர் கவனத்தையும் பெறுவதோ திருப்புவதோ இல்லை என்பதை விட வருத்தப்படுவதைக் கண்டு கொள்ளாதவர்கள் சூழ இருப்பதுதான் பெரிய வருத்தமாய் இருக்கிறது.

உதிர்ந்து கிடந்த சருகுகள் காற்றுக்குக் கலைந்து ஓடுதலாய் மனிதர் கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. பல வண்ணம் கலந்து கிடந்த போதிலும் சுமை தூக்குவோரின் சிவப்பு வண்ணம் கண்ணை உறுத்திக்கொண்டிருந்தது.

சுமைகளைத் தூக்கிக் கொண்டு ஓட முடியாதவர்கள் மட்டும் தேங்கிக் கிடந்தனர். ஒவ்வொருவர் மனதினுள்ளும் முண்டியடிக்கும் எண்ண அலைகள் என்னை நெருக்கி நெளிந்து விடச் செய்யும்படியாய் இருந்தது. எனக்குள் ஏறியிருந்த மனிதர் கூட்டம் என்னை முற்றிலுமாய் மறந்து விட்டிருந்தது. நான் அவர்களாகவே அவர்களுக்கு மாறிப் போயிருந்தேன்.

ஒவ்வொருவராய் ஏறி என்னில் ஆக்கிரமிக்க நான் நிரம்பத் தொடங்கியிருந்தேன். குழந்தைகள், ஆண்கள், பெண்கள், சரக்குகள் எல்லாம் பயணத்திற்கான பரபரப்புகளை அடுத்தவருக்குள்ளும் திணித்த படி இருக்க மீண்டுமொரு பெருமூச்சுடன் என் பயணம் தொடங்கியது.

ஒரு திசை பார்த்து ஓடிக் கொண்டிருந்தேன். இல்லை ஓட்டப்பட்டுக் கொண்டிருந்தேன்.

மனது?

எனக்கேது மனது என்கிறீர்களா?

எனக்கான மனதாய் அவள் சிந்தித்துக்கொண்டிருந்தாள். அவளது சிந்தனைகள் நினைவுகள் எனக்குள் கேட்கிறது. இனி அதை உங்களோடு பகிர்ந்து கொள்வேன். ஓட்டம் மட்டும் தான் ஒரு திசை நோக்கி. மனசோ பல்வேறு திசைகளிலும் அடித்துப் போய்க் கொண்டிருந்தது.

அவளும் அவளது குழந்தையும் அமர்ந்திருந்தார்கள். ஊருக்குப் போகும் சந்தோசம் அவள் குழந்தைக்குள் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அவளது கவனமும் சிந்தனையும் குழந்தை மேல் படிந்திருந்தது. பெட்டிகளை இருக்கைக்கடியில் அழுத்தித் தள்ளியாச்சு, கைப்பை பக்கத்திலேயே இருக்கட்டும் அப்பதான் சூதானமா இருக்கும். தண்ணி பாட்டில் எடுத்து கைக்கருகே வைக்க ஓடி வந்து தண்ணீரை வாங்கிக் குடித்து சட்டையை ஈரமாக்கிப் போனான்.

இருக்கைக் கடியில் தள்ளிய பையை மீண்டும் எடுத்து சட்டை ஒன்றை வெளியில் எடுத்து மாற்றி விட்டாள்.

டிக்கெட் பரிசோதகர் வந்தமர்கிறார் இருக்கையில்.

கையில் அட்டை அதில் கொஞ்சம் தாள்கள். பெயர் பட்டியலோடு கையில் நான் தயாராக எடுத்து நீட்டிய பயணச் சீட்டு வாங்காமலேயே முகம் நிமிர்ந்து எனை ஆழ ஊடுருவும் பார்வை, அவர் பார்க்கப் பெயரையும் குழந்தை பெயரையும் உச்சரிக்கிறேன்.

அவர் வாய்க்குள் நுழைய மறுத்த என் பெயர் திரும்ப அவர் உச்சரிக்க முயல நான் மீண்டும் திருத்தி உச்சரிக்கிறேன். பெயர்ப் பட்டியலில் தேடிக் குறித்துக் கொண்டு பயணச் சீட்டிலும், கிறுக்கி முடித்துத் திரும்ப நீட்ட வாங்கி கைப்பைக்குள் பத்திரப் படுத்துகின்றேன். அவரை நோக்கி இரு இளம் பெண்கள் வருகின்றனர். தாயும் மகளும். அவர்கள் மொழி எனக்கு அந்நியமாய் இருந்த போதும் பல நேரங்களில் புரிதலுக்கு மொழி ஒரு தடையல்ல என்று உணர்த்திப் போகின்றன இது போன்ற தருணங்கள்.

அவர்கள் குரலில் ஒரு கெஞ்சல். படுக்கைக்கான இடம் உறுதியாகவில்லை மாற்று ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கெஞ்சுகிறாள் மகள்.

அலட்சியப்பார்வை கண்களில் தொக்கமற்ற எல்லா சீட்டுகளையும் சரிபார்த்து விட்டு அந்த பெரியம்மாவை அங்கேயே அமரச் சொல்லி விட்டு

"வா பார்த்து ஏற்பாடு செய்கிறேன்."

சொல்லி கறாராய் முன்னால் நடக்க எனக்கு ஏதோ உறுத்திற்று. அவள் செருப்பை மாட்டி அவர் பின்னால் போக முற்பட அவள் பின்னிருந்து கைகளை மெல்லத் தொட்டேன். திரும்பினாள். நான் தலையை இடம் வலமாக ஆட்டி கண்களைச் சுருக்கி யோசனையோடு வேண்டாமென்று தலையாட்ட ஏன்? என்பதாய் குழப்பமாய் அவள் பார்க்க உள்ளுணர்வு நான் சொல்வதை கேட்கச் சொல்லியிருக்க வேண்டும்.

எனையே பார்த்துக் கொண்டிருக்க,

"அவர் மீண்டும் இந்தப் பக்கம் தான் வருவார்."

என் சைகைமொழி அவளுக்குப் புரிய அமர்ந்தாள். பரிசோதகர் பெட்டி கடைசி வரை போய்த் திரும்பி பார்த்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருப்பது உறுத்த ஏதோ யோசிப்பதாய் பாவலா காட்டி விட்டு நடக்கத் துவங்கினார்.

இதற்கிடையில் நானும் குழந்தையும் கொண்டு போயிருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு கை கழுவப் போகும் போது பரிசோதகர் அமரும் இருக்கையில் நடுத்தர வயது பெண் அமர்ந்திருந்தாள்.

முன்பதிவு செய்யாது மாறி ஏறியிருப்பது அவள் உட்கார்ந்திருந்த தயக்கத்தில் தெளிவாகத் தெரிந்தது. எங்களோடு இருந்தவர் ஒருவர் அடுத்த பெட்டிக்கு போகுமாறு மிரட்ட, அவள் பார்வையைத் தழைத்துக் கொண்டாள். முடியை அள்ளிக் கொண்டை இறுக போட்டிருந்தாள்.

முகத்தில் கிராமத்துக் களை தெளிவாகத் தெரிந்தது. பவுடர் அவளுக்கின்னும் அறிமுகமாயிருக்கவில்லை. கையில் ஒரு சின்ன துணிப்பைக் கட்டும், பெரிய போராட்டத்துக்கிடையில் அவள் மனம் இருந்ததை அவளது முக இறுக்கமும், நெஞ்சோடு அணைத்திருந்த மூட்டையும் காண்பித்தது.

திடீரென ஏறிய அவள் எதுவும் திருடிப் போய் விடுவாளோ? எல்லாருக்குள்ளும் கூடுதல் எச்சரிக்கை ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் பெண்கள் தங்கள் கணவன் மேல் கண் வைத்திருந்தனர்.

குழந்தைக்கு விரித்துப் போட்டு அவனைப் படுக்க வைத்தாயிற்று. அம்மாவும் மகளும் இன்னும், பதட்டத்தோடு பேசியபடி இருந்தனர். மீண்டும் பாதை வழி பரிசோதகர் வந்த படி இருக்க, அவர் பார்வையில் திருட்டுத்தனம் அப்பட்டமாய் தெரிந்தது. பாதையிலிருந்து அந்த ஒற்றையிருக்கையில் பரிசோதகர்,

பார்வை தவிர்க்க நினைத்ததாலோ என்னவோ தலை கவிழ்ந்தபடி உள்ளங்கையில் தன் தலையைப் பதித்திருந்தாள். நின்றபடி குனிந்து அவளை உற்று நோக்கியபடி இருந்தவர், தோளில் கையிட்டுத் தொட்டு எழுப்ப, பதறி எழுந்தவள் தனையே உதறுவாள் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

ஏதோ அவர் கேட்க, அவள் கலவரமாய் பதில் சொல்ல இரயில் சத்தத்தில், பெருமூச்சில் அவள் குரல் வெறும் வாயசைப்பாய் மாறிப் போயிருந்தது. அவளை இறக்கி விட்டு விடுவார். அல்லது வேறு இடத்திற்கு, முன் பதிவு செய்யாத இடத்திற்கு போகச் சொல்வார் என்று நாங்கள் கணித்திருந்தது பொய்யாகிப் போக அவர் அவளைத் தாண்டி எங்களை நோக்கி வந்து விட அவள் தயக்கம் இன்னும் தீராமலேயே இருக்கையின் நுனியில் அமர்ந்தாள்.

தாயும் மகளும் தாங்களே சிலரோடு பேசி தங்களுக்கான இடத்தைத் தீர்மானித்திருந்தனர். ஒவ்வொருவராய் தூங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்கள். பரிசோதகர் எல்லாரையும் தாண்டி மறைந்துபோனார்.

ஒவ்வொரு விளக்காய் அணைக்கத் துவங்கியிருந்தனர். மெல்லப் பெட்டி நிலவு போர்த்திய வெளிச்சத்திற்குள் தூங்கப் போனது. இரயில் இரைச்சலை விட ஓடும் மின் விசிறிகளின் இரைச்சல் அதிகமாயிருக்கப் பூட்டுகளோடு இணைக்கப்பட்ட பெட்டிகளும், பைகளும் புரண்டு படுக்கும் பெண்ணின் கொலுசுச்சத்தமாய் சிணுங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு மூன்று நிறுத்தங்கள் வந்து போன போதும், காப்பி, டீ விற்கும் பையன்களின் சத்தம் கேட்டபோதும் அதற்கப் பழகிப் போய் எல்லாரும் உறங்கியிருந்தார்கள். எனக்குள் தூக்கம் வரவிடாது, "நாளை" பற்றிய சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன. இரயிலும் வேகமாய் கதவுக்கருகில் இருந்த வெளிச்சம் கீற்றாக என்மேல் விழுந்து கண்கள் வரை எனை வெட்டிக் கொண்டிருந்தது. சன்னலுக்கு நேராக இருந்திருந்த நிலவு இப்போது வானத்து உச்சிக்கு வந்திருக்க, என் பார்வையில் படாது போயிருந்தது.

மீண்டும் பரிசோதகர் வருகிறார். கையில் அட்டை இல்லை. போட்டிருந்த கருப்பு கோட் இல்லை. மெல்ல இருட்டை துழாவித் துழாவி வந்து கொண்டிருந்தார். மகள் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க, நின்று தூங்கும் அவளை உற்றுப் பார்க்கிறார். எல்லாரும் தூங்கிவிட்டதாக நினைத்திருக்கக்கூடும்.

ஒத்தை சீட்டில் அமர்ந்திருந்த அந்த பெண் உட்கார்ந்த படியே இருக்க, அவள் தலை தடாலென விழுந்தது. தூங்கியிருக்க வேண்டும். எனைக் கடந்து சென்ற அந்த உருவம் அவள் அருகில் போய் நிற்க அவள் திடுக்கிட்டு எழ முயற்சிக்க தோளில் கை போட்டு அழுத்தி உட்கார வைக்கிறது. அந்த இருள் உருவம் வெளிச்சம் விழுந்த முக பக்கம் எனக்கு முதுகு காட்டியபடி இருக்க, இருள் முதுகே எனக்கு முகம் காட்டிய படி இருந்தது.

இதுவரை, இரைச்சலோடு ஓடிக் கொண்டிருந்த மின்சார விசிறிகளை விட என் இதய இரைச்சல் வேகமாய் அடிக்க அந்த சப்தத்தில் எல்லாரும் விழித்து விடப் போகிறார்கள் எனும் பயம் எனக்குள் அனிச்சைச்செயலாய் நிகழ்ந்து கொண்டிருக்க, சப்தம் தவிர்க்கவென்று மூச்சு விடுவதை நிறுத்திக் கொள்ள முயல்கிறேன்.

ஒரே இருக்கையில் அவளைத் தள்ளச் சொல்லி அந்த உருவமும் நெருக்கி அமர எதிர்பார்த்திடாத ஒரு கணத்தில் இதழோடு இதழாய் அவளை அழுத்தியிருந்தது.

என் கைகள் வேகமாய்த் தூங்கும் என் குழந்தையின் கண்களை மூடுகிறது அவன் தூங்கி வெகு நேரமாகிறது என்று தெரிந்திருந்தும். என் அசைவு சந்தேகம் தந்திருக்க வேண்டும். இருவரும் காணாமல் போகின்றனர். கழிவறை திறந்து மூடும் சப்தம்.

நிமிடங்கள் இடிஇடியாய் எனக்குள் இறங்க என்ன செய்வது? செய்யலாமா? கூடாதா? நானெப்படி தலையிட அடுத்தவர் அந்தரங்கம் பார்க்க நேர்ந்தது கூசிப் போக,

மூடிய விழிகளோடு காதுகள் விழித்திருக்கின்றன. ஒரு சோடிக் காலடி ஓசை எனைக் கடந்து செல்கின்றது. விழிகள் மெல்லத் திறக்க இரண்டு நிமிட இடைவெளியில் நடுத்தர வயதுப் பெண் தலையெல்லாம் ஈரம் சொட்டச் சொட்ட வந்தமர்கிறாள்.

இருக்கையில் பையை இன்னமும் அழுத்தமாய் மடியில் வைத்தழுத்தியபடி. தலையிலிருந்து வழிந்த நீரா, இல்லை அவளது விழி நீரோ? யோசிக்க முடியாது திகைத்துப்போய் படுத்திருக்கின்றேன். நான் கையாலாகாது படுத்திருந்தது உறுத்த விழிகள் மூடிக் கொள்கின்றன. திறந்து நிஜம் பார்க்க பயம். எப்பொழுது தூங்கிப்போனேன் தெரியாது. விழிக்கும் போது அந்த இருக்கையில் ஆளில்லை.

காலை நேரச் சூரியன் விழிக்க, வீசிய இளந்தென்றல் இயந்திர வாசனையோடு முகத்தில் அடிக்கத் தயாரானேன் அடுத்த நிறுத்தத்தில் இறங்க,

பையனை எழுப்பிப் பெட்டி எடுத்து, அவள் இறங்க அவளைப் போல உறங்காது விழித்திருந்த அயர்ச்சியில் எனது பெருமூச்சும் சேர்ந்தெழும்புகிறது.

அவளோடு நானும் இடம் பெயருகின்றேன்.

அடுத்த தொடர் வண்டி பார்த்து, குளிர் சாதன வசதி நிறைந்த அந்த பெட்டியிலவள் ஏற நானும் அவளோடு பயணிக்க முடிந்திருந்தது. அவள் மனப் பேச்சு எனக்குள் கேட்டு எனை அவளோடு இழுத்து வந்திருந்தது. ஏறி வசதியாய் அமர்ந்த பின்னும் மனது நேற்று நடந்ததை அசை போட்டது, மூடும் வசதியுடன் இருந்த அந்த பெட்டி பார்த்து ஆறுதல், நெஞ்சுக்குள் முன் பதிவின்றி யாரும் எறி விட முடியாதென்று.

கொஞ்ச நேரத்தில் என்னருகில் இன்னுமொரு குடும்பம் குழந்தையோடு. அந்தக் குழந்தைக்கு இரயில் வண்டி கப்பலாகியிருந்தது. அதன் கற்பனைக்குள் என்னையும் திணித்துக் கொள்ளப் பிரயத்தனங்கள் எடுத்துத் தோற்றுப் போயிருந்தேன். குழந்தையின் கற்பனா மனோ வேகம் நான் பயணிக்க முடியா வேகத்தில் இருக்க ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன் அவள் அறியாதபடி, அவளின் அதே கற்பனை எனக்கும் சுகம் தர ஆரம்பித்த நொடியில் ஒரு மெல்லிய அதிர்ச்சியுடன் எனது இரயிலும் அவளது கப்பலும் கிளம்பியிருந்தது.

அப்போ, கதவைத் திறந்து வந்தமர்ந்த பெண்மணி பார்க்க சுவாரசியம் தந்தாள். வயது நாற்பது இருக்குமா? இருக்கும். மறைக்க நிறைய முயற்சிகள் எடுத்திருந்தாள் பலித்திருந்தது. ஆழ்ந்து கவனிப்பவர் கண்களை மட்டுமே ஏய்க்க முடியாத படி,

கட்டியிருந்த பட்டு சேலை அந்த சூழலுக்கு ஒரு அதீதமான உணர்வைத் தந்தது. எல்லார் கவனமும் அவள் மேல் விழ, என் அருகில் இருந்த குழந்தையின் அம்மா கவனம் கீழே இழுபட்ட அந்த பெண்ணின் சேலையை பற்றிய கவலையில் இருந்தது.

தன் சாமான்கள் எல்லாவற்றையும் உரிய இடத்தில் வைத்து விட்டு கையில் புத்தகத்துடன் அமர்ந்தாள். தன் இருக்கையில் கண்கள் நோட்டம் விட்டன. கூட இருந்தவர்களை நோக்கி அவள் சிரித்தாள் எனைப் பார்த்து, எனைப் பார்த்து சிரித்தாளா இல்லையா என்கின்ற யோசனையில் அவள் பார்வை என்னிடமிருந்து மீண்டு போய் விட்டது என் சிரிப்பை எதிப்பார்க்காது.

போயின பொழுதுகள்....

மெல்லச் சூரியன் தன் கடையைச் சுற்றித் தூக்கிக் கொண்டு போக இப்பொழுது புதிதாய் ஆட்கள் வந்திருந்தார்கள். குழந்தையுடன் இருந்த குடும்பம் இறங்கிப் போயிருந்தது.

கல்லூரி மாணவன் தோற்றத்தில் ஏறியிருந்தான். நான் பையனைத் தூங்க வைக்கத் தயாராகியிருந்தேன். தனியே அமர்ந்திருந்த அந்த பெண்மணியை நெருங்கிச் சென்று நின்றான் அவன். அவர்கள் பேசுகிற உரையாடல் பையனை தூங்க வைக்கத் தூங்குகின்ற பாவனையில் இருந்த என்னால் உணர முடிந்திருந்தது. மெல்ல ஒரு அறிமுகம் அவர்களுக்குள் ஆரம்பமாகத் துவங்கியிருந்தது.

ஒவ்வொரு பெட்டியின் விளக்கும் ஒவ்வொன்றாய் அணையத் துவங்க நேற்றைய இரவு வந்து போகுது, நினைவில் உரையாடலைத் தொடர்ந்து சிரிப்புத் சத்தம் கேட்க நான் கண் விழித்துப் பார்க்கிறேன். அந்த பெண்மணியின் அருகில் அவன் இப்போது அமர்ந்திருந்தான்.

தன்னை ஒரு தொழிலதிபரின் மனைவியாக அறிமுகம் செய்து கொண்டிருந்தாள் அவள். அவளது பேச்சில் தனது தனிமை பற்றிய சுய பச்சாதாபம் இருக்க, அவளது சிரிப்பையும் தாண்டி கவலை, வருத்தம் பேச்சில் தொக்கி இருந்தது. அவன் அதை அடையாளம் கண்டு கொண்டிருக்க வேண்டும். அவனது கணிவான, மகிழ்வான பேச்சுக்கு அவள் அடிமையாகிக் கொண்டிருந்தாள்.

பள்ளம் நோக்கி நதி பாயத் துவங்கியிருந்தது.

பள்ளம் நிரம்பிய பின் அதனுள் தங்க முடியாது தாண்டி போய்த்தான் ஆக வேண்டியிருக்கும் என உணரப்பட்டிருந்ததா அவளால்?

அவர்கள் கைகள் கோர்த்தபடி பேசிக் கொண்டிருந்தது அதிர்ச்சி தர இன்னும் அழுத்தமாய் மூடிக் கொள்கிறேன் விழிகளை. பேச்சிலும் நடவடிக்கையிலும் அவர்கள் நெருக்கம் கூடிக் கொண்டிருக்க இன்று எனக்குள் நேற்று இருந்த கூச்சம் போயிருந்தது.

அடுத்தவர் அந்தரங்களைப் பார்க்க நேற்றுக் கூசிய மனது இன்று பழகிப் போயிருந்ததா?

இல்லை அது அடுத்தவருக்கான அந்தரங்கம் இல்லை எனத் தெளிந்திருந்ததா?

காசு மட்டும் மனிதனுக்கு, மனிதன் மனத்திற்கு போதாமல் போயிருப்பது உறைக்க ஆரம்பித்திருந்தது, அவளின் தனிமை இந்த கொஞ்ச நேரத் துணையில் தீர்ந்து போகுமா? இல்லை அந்த கொஞ்ச நேரத்தை இழக்க தயாராயில்லாத நிலையில் இருக்கிறாளா? வார்த்தைக்கு வார்த்தை கணவரின் பெருமை பற்றி பேசிக் கொண்டிருந்தாள். கூடவே எல்லாம் இருந்தும் தனக்குள் இருந்த வெறுமை பற்றியும்.

"இரயிலில் இருந்து இறங்கிப் போனவுடன் மறந்து விடுவீங்க?"

கேள்வி சிரிப்போடு கேலியாய்ப் பேசுவதாய் இருந்திருந்தது. தனிமையுணர்வை தொலைக்க ஓர் ஆணைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் அவளுக்குள் ஏற்பட்டிருப்பது தெளிவாயிருந்தது. இந்த நிர்பந்தத்தை கடந்துவிட அவள் முயலவில்லையா? இல்லை முடியலையா?

மெல்ல அவர்கள் பேச்சில் உறவுகள் பற்றிய உரையாடல் துவங்க நேற்றும் தூங்காத களைப்பில் தூங்கிப் போயிருந்தேன்.

இருள் பிரியாத விடிகாலையில் நான் விழித்துப் பார்க்க எல்லாரும் தூங்கிப் போயிருந்தனர் அவரவர் இடத்தில். நான் இறங்க வேண்டிய இடம் வந்திருக்க தூங்கிய என் பையனைத் தோளில் தூக்கியபடி இரயில் விட்டு இறங்கினேன். அவள் இறங்க, நானும் அவளுள்ளிருந்து விடைபெற்று,

இயற்கையின் எல்லா நிர்பந்தங்களையும் கிழித்துக் கொண்டு பேரிரைச்சல் செய்தபடி எனக்கான பாதையில், தடம் மாறும்போது எனக்கான இலக்குகளை நோக்கியபடி ஓடத் துவங்கினேன்.

நடந்திருந்த காட்சிகள் என்னிலிருந்து பின்னோக்கி நகல, புதிய காட்சிகளுக்கும், கற்றுக் கொள்ளுதலுக்கும் என்னைத் தயாராக்கியபடி என் பயணம்....

எழுதியவர் : கணேஷ் கா (24-Jan-14, 11:40 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 109

மேலே