கல்லணைக்கோர் பயணம்14
கல்லணைக்கோர் பயணம்..14
(இடையாற்றுமங்கலதிலிருந்து )
கொள்ளிடத்தின் வடபுறம்
உள்ள ஊர்கள்
வடகரை எனவும்
தென்புறம் உள்ளவை
தென்கரை எனவும்
வழங்கப்படுகிறது காலங்காலமாய்..
தென்கரை தெக்கிக்கரையாய்
மாறிப்போனது காலப்போக்கில்
வடகரை நெல்
வாழை, ஆலைக்கரும்பு
உளுந்து, எள்ளை
சுழற்சி முறையில்
விளைவித்து வாழ்வளிக்கும்
விவசாயிகளுக்கு வருடம்
முழுவதும் வஞ்சனையின்றி..
தெக்கிக்கரையில் இவையன்றி
காய்கறிகளும், செங்கரும்பும்
வெகு பிரபலம்
தூய்மையான காய்கறிகள்
வடகரையை நோக்கி
கொள்ளிடம் வழியே
பயணிக்கும் நிதமும்
மலிவான விலையுடன்..
அன்றாடம் தலையில்
சுமையோடு தைரியமாய்
கொள்ளிடத்தை கடந்து
வியாபாரம் செய்வர்
தெக்கிக்கரை காய்களை
துணிவுள்ள மங்கையர்கள்..
கோடை காலங்களில்
வெள்ளரி பழமும்
வீடுவரும் தித்திப்புடன்..
பூமியில் உள்ள
இனிப்பை தானும் உண்டு
தானமும் வழங்கும்
பசுந்தோகை விரித்தாடும்
அடர்ந்த சிவப்பில்
வெள்ளை நிற
கட்டமிட்ட சட்டையை
கச்சிதமாய் அணிந்து
பள்ளி சிறுவர்கள்
வகுப்புவாரியாக நிற்பதுபோல்
அழகாய் அணிவகுத்து
நின்றன செங்கரும்புகள்..
(பயணிப்போம்..14)