தந்தைகோர் தாலாட்டு

தந்தைகோர் தாலாட்டு......!
தாய் பெற்றாள் வரமாய்
நீ காத்தாய் பூமரமாய்
வறுமையை அறிய விடாது
அறிவு தந்து வளர்த்தாய்....!
நான் நித்திரையானபின்னே தான் கட்டி அணைப்பாய்
கர்வத்தை வெளியிலும்
பாசத்தை மனதிலும் வைத்து
பகுத்து வளர்த்த அப்பனே !
உன்னை பாடாமல் ஒருநாளும்
இருந்ததில்லை மனதிற்குள்ளே.....!
என்னை வாழ்த்தாமல் இருந்ததில்லை நீயும் உந்தன் உயிருக்குள்ளே ......!
ஆதலால் தான் நீ அங்கு நினைக்க இங்கு இமை உடைத்து விழுகிறது
தனிமையில் உனது கண்ணீர்....!
நரை விழுந்த பின்னும் நடை தளர்க முன்னும் குடை பிடிக்க இதுவரை எவரையும் கேட்டதில்லை வாழ்வின்
தடை உடைத்து வளர்த்து ஆளாக்கிய வித்தகா ...!
உனை நினைத்து வாடுகிறேன்
உயிர் கரைந்து வாழ்த்துகிறேன்
என் அப்பாவே!
நீ எனக்காக ஆயிரம் கனவு கண்டிருப்பாய் அதில் ஒரு கனவை கூட நிஜமாக்க விடவில்லை யுத்தம்
இருந்தாலும் .....!
தந்தையே! கல்லையே கரைத்து
கஞ்சி ஊற்றிய விந்தையே!
நீ சுமந்த பிள்ளை இவன்
நாளை யார் சுமந்த பிள்ளையென ஊரெல்லாம் கேட்க வைப்பான் உறவெல்லாம் உன் பெயரை கொண்டு செல்வான் அந்த இனிமையிலே கொஞ்சம் நீ தூங்கு காற்றில் கொஞ்சி அனுப்புகிறேன்
சுவாசமாய் எனை உள்வாங்கு.....!
(எந்தன் கதாநாயகன் அப்பாவுக்கு)

எழுதியவர் : Akramshaaa (26-Jan-14, 6:27 pm)
பார்வை : 40

மேலே