பிண மனம்

சொந்தங்கள் என்னை சுற்றி..
சோக பாடல்கள் என்னை பற்றி..

அழுகின்ற முகத்துடன்.. என்னவளை
அப்படி நான் கண்டதில்லை அதுவரை..

பார்த்து பார்த்து.. நான் வளர்த்த என்
பிள்ளைகள்.. என்னை
பார்த்தபடி கண்ணீருடன்..

தோற்றுவிட்டேன்.. என்
தோழர்கள் என்னால் அழக்கூடாதென
நான் கொண்ட சபதத்தில்..

"அழாதீர்கள்" என
ஆறுதல் கூட கூற இயலவில்லை!!

உயிரோடு இருக்கையில் புரியவில்லை..
எனக்காக இத்தனைபேர் கண்ணீர் சிந்துவார்கள் என்று!!

இந்த கஷ்டங்களை.. நான்
காணக்கூடாது என்பதற்காகவோ என்னவோ.. என்
கண்களை மூடிவிட்டார்கள்..

நாடி நின்று போன பின்னும்.. என்
நினைவுகள் என்னைவிட்டு நீங்கவில்லை..

ராஜாவை போல் செல்கிறேன்..
தெருவீதியில்.. சிம்மாசனத்தில்..
சுடுகாட்டை நோக்கி!!

திருமணதிற்கு பின்.. சடங்குகள் என்னை சுற்றி..
என்னவளை மட்டும் காணவில்லை அருகில்..

"வேண்டாம்" என என்மனம் கூறினாலும்..
விறகுகள் என்மேல்..

பாவம்.. தாரை தப்பட்டையில்.. என்குரல்
கேட்கவில்லை போல!!

நடந்தால் சுடும் என
நான் தூக்கி வளர்த்த என் பிள்ளை கையில்..
கொள்ளிக்கட்டை.. எனக்காக!!

சந்தோசமாக சாம்பலாகிறேன்!! இத்தனைபேர் மனதை
சம்பாதித்து விட்டேன் என்ற சாதிப்புடன்..

எழுதியவர் : ராஜ்காந்த் (28-Jan-14, 2:55 pm)
பார்வை : 116

மேலே