ஓங்கட்டும் நம் ஒற்றுமை

தரனியெங்கும் நிறைந்திருக்கும்
தமிழினமே வணக்கம்!
தமிழன் என்று சொல்லுவதில்
தலைக்கனம்தான் எனக்கும்!
தங்கம் வெள்ளி வைரமெல்லாம்
தமிழைக் கண்டு மலைக்கும்!
தமிழின் பெருமை எழுதும்போது
தாளும்கூட மணக்கும்!
எல்லாப் புகழும் நமக்கிருந்தும்
ஏதோவொரு வருத்தம்!
நம் ஒற்றுமையில் ஓட்டையென்பதை
ஒவ்வொரு நிகழ்வும் உணர்த்தும்!
நம் உள்ளமதை உழவு செய்து
ஒற்றுமையை விதைப்போம்!
நம் சுயநலத்தை சுருட்டி
அதைச் சுடுகாட்டில் புதைப்போம்!
நம் ஒற்றுமையில் படிந்திருக்கும்
ஒட்டடையைத் துடைப்போம்!
நம் உரிமைகளை மறுப்பவரின்
உச்சி மண்டை உடைப்போம்!
பன்னிரண்டு கோடி தமிழர்
பலத்தை ஒன்று சேர்ப்போம்!
பாரெலாம் நாம் படும் துயரை
படிப்படியாய் தீர்ப்போம்!