யார் ஊனமுற்றவர்
அந்தி சாயும் அழகிய மாலை....
அது ஒரு ஊனமுற்றவர்கள் பயிலும் பள்ளியின் வண்டி....
சாலையில் வண்டி சென்றுக்கொண்டே இருந்த போது
ஒரு இடத்தில் வண்டியில் இருந்த ஒரு சிறுவன் பதற்றமாக கத்தினான்."அங்கே பாருங்க!! ஏதோ ஒரு விபத்து நடந்திருக்கு.நிறைய பேருக்கு அடிப்பட்டிருக்கு போல இருக்கு!!..".
உடனே இன்னொரு சிறுவன், " வாங்க!!நாம நம்மளால முடிஞ்ச உதவிய செய்யலாம்!!"என்று கூறி தன் இருக்கையை விட்டு எழுந்தான்.நன்கு கவனித்து பார்த்தால் தெரியும் அவனுக்குப் பார்வை இல்லை என்று....
எல்லோரும் அந்த இடத்துக்குச் சென்று விரைவாக இரு இருவராக இணைந்து உதவிகளை செய்ய முன் வந்தனர்.
அங்கு சிறிய அடிகளுடன் தப்பித்த இருவர் இருந்தனர் ....
அவர்களில் ஒருவர், அங்கு பலத்த அடிப்பட்ட மற்றவர்களுக்கு தண்ணீர் கொடுத்து ,முதலுதவி செய்துக் கொண்டிருந்தார்.....
இன்னொருவர் சற்று தள்ளி இருந்த ஒரு பாறையில் வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்திருந்தார்....
சிறுவர்களும் அவர்களுடைய கண்காணிப்பாளரும் வருவதை கண்ட முதலாமவர் "தப்பா நினைச்சுக்காதீங்க...உங்களாலே உதவி செய்ய முடியுமா?"
என்று சந்தேகமாக வினவினார்.
"நீங்க போய் ஏதாவது ஒரு மருத்துவமனைக்கு உங்க செல் பேசியிலிருந்து ஆம்புலன்ஸ்க்கு சொல்லுங்க. நாங்க இவங்கள பாத்துக்கறோம்" என்று கண்காணிப்பாளர் சொன்னார்.
செல்பேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் வேலை செய்த விதத்தை கவனித்து ஆச்சரியப்பட்டார்...
ஒரு கண்பார்வையற்றவரும் ஒரு கால் ஊனமுற்றவரும் இணைந்து....,ஒரு வாய் பேச முடியாதவரும் ஒரு கை ஊனமுற்றவரும் இணைந்து.....,இவ்வாறு வந்திருந்த பத்து
பேரும் வேகமாக உதவி செய்தனர்.
எல்லோரும் சேர்ந்து ஆம்புலன்ஸ் வந்தவுடன் அவர்களை அதில் ஏற்றிவிட்டு வந்தனர்....
அப்போது அவர்களை வியந்த வண்ணம் அடிப்பட்டவர் சொன்னார்."எவ்வளவோ பேர் இந்த வழியாய் சென்றார்கள்.ஆனால் ஒருவருக்கும் வந்து உதவி செய்ய மனமில்லை. நீங்கள் மட்டும் தான் உதவிக்கு வந்தீர்கள்.அதோ அந்த பாறையில் உட்கார்ந்திருக்கிறானே அவன் என் நண்பன்.அடிப்பட்டவர்களுக்கு உதவ கூப்பிட்டபோது எனக்கு ரத்தத்தை பார்த்தாலே அருவருப்பா இருக்குன்னு சொல்லிட்டான்.அவனை என் நண்பன்னு சொல்லவே எனக்கு வெட்கமாயிருக்கு...இனிமே இவனோட நட்பு எனக்கு வேண்டாம்..."
இதை கேட்ட கண் பார்வையற்றவர்" அப்படி சொல்லாதீர்கள். இனிமேல் தான் அவருக்கு உங்கள் நட்பு அவசியம்.எங்களைப் போல் அவரும் ஊனமுற்றவர் தான்.எங்களுள் எப்படி சில பேருக்கு கண்பார்வை ,கால்கள் ,கைகள்,பேச்சு,கேட்கும் திறன் முதலியவை இல்லையோ,அதே போல அவருக்கு மனிதாபிமானம் இல்லை.நாங்கள் உடலால் ஊனமுற்றவர்கள் என்றால் அவர் மனதால் ஊனமுற்றவர்.
எங்களுக்காவது இரக்கப்பட்டு யாராவது உதவி செய்வார்கள் .ஆனால் அடிப்பட்டவர்களுடைய கதி அவருக்கு நேர்ந்தால்....?,"என்று கூறி,சற்று மௌனமாய் இருந்தார்.
பின்னர்,"உங்களை போல் நண்பர்கள்தான் அவருக்கு பிற்காலத்தில் உதவமுடியும்.அதனால் அவரை திட்டாதீர்கள் . கடவுள் அவரை மனத்தால் ஊனமுற்றவராய் படைத்ததற்க்காக வருத்தப்படுங்கள்."இவ்வாறு சொல்லிவிட்டு விடைபெற்றுகொண்டு சென்ற அவர்களை மிகுந்த பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.அவர்கள் ஊனமுற்றவர்களாக என் கண்களுக்கு தெரியவில்லை.எதிர்கால இந்தியாவின் மன உறுதி மிக்க தூண்களாக தோன்றினார்கள்.