குழந்தை தொழிலாளர்கள்

மண்வெட்டி உயரமில்லை
மண்பெட்டி சுமக்கிறார்கள்
சொல்கூட திருத்தமில்லை
கல் கூடை சுமக்கிறார்கள்!

எழுத்தாணி அளையாமல்
புழுதியள்ளி அளையுறார்கள்
உளுத்துப்போன உலகத்தில்
வழுதுகின்ற வைரங்கள்!

இடுப்பொடிந்த அப்பன்
இருப்பது படுக்கையிலோ
அடுப்பெரிக்க முடியாத
அம்மையின் இடுப்பில்
கைக்குழந்தையோ தெரியாது!

யார் பெற்றுப் போட்டாரோ
ஊர்விட்டு வந்தாரோ?
தறிகெட்ட தகப்பன்தான்
வீடுவிட்டு துரத்தினானோ?

உடுப்பதற்கு துணியில்லை
அந்தவேளை
உள்ளத்தில் பிணியில்லை
நல்லவேளை

இரப்பதற்கு துணியாமல்
பிறர் முன்னே பணியாமல்
பரபரப்பாய் பணியினிலே
துணிவாக
பசிப்பிணி போக்க போராடும்
இவர்கள் பல
பிணிபடர்ந்த புஷ்பங்கள்

பகலெலாம்
ஓடியாடி
ஒளியினை வேட்டையாடி
தனக்காக போராடி

இரவிலே
விளக்கேற்றி
தன் வாழ்வின் இருளகற்றும்
மின்மினிகள் ! —

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-14, 8:43 pm)
பார்வை : 67

மேலே