முத்தமிழ்

முத்துமிழ் கடல்கள் மூன்று
முப்புறம் சூழ்ந்தி ருக்க
இத்தரை தன்னில் தோன்றி
இன்றள வும்மெம் நாவில்
புத்தமிழ் தெனச்சு ரந்து
புத்துயிர் ஊட்டு கின்ற
முத்தமிழ்த் தாயே! மூல
முதல்மொழி ஆனாய் நீயே!

நாவினில் கனிகள் மூன்றாய்
நனிசுவை கூட்டி;க் காற்றில்
மேவிய கொடிகள் மூன்றில்
வீரமாய்ச் செறிந்து; சூழுங்
காவினைப் பெற்ற மூன்று
கவினுறு நாட்டை யாண்ட
ஓவிய வேந்த ரெல்லாம்
ஓம்பிய கழகம் மூன்றில்

நித்தமும் சிந்த னைக்குள்
நிறுத்தியே பண்ணி யற்றும்
வித்தக புலவர் நாவில்
விளைந்துகோ லோச்சு கின்ற
முத்தமி ழுண்ட தாலோ
முத்துமிழ் கின்ற தாழி?
அத்தமிழ் கொண்ட தாலோ
அமிழ்தினை வழங்கிற் றூர்க்கே?

‘இயன்’றதைக் கரந்தி டாமல்
ஈவதே ‘இசை’யா மென்று
நயம்பட ‘நாட கம்’நீ நவின்றிட
வேண்டி யன்றோ
இயல்,இசை, நாட கம்மாய்
இலங்கினை; உன்மீ துற்ற
மையலால் தன்ன லத்தை
மறந்ததால் வாழ்வா ருண்டே

தமிழினை ஆள வேண்டி
தரணியாள் ஆசை விட்டான்
நமதிளங் கோ;அ வன்போல்
நந்தியும் செவிம டுத்தான்
நமனெனச் சூழ்ந்து நின்ற
நற்றமிழ்க் காய்;தான் உண்ணா(து)
அமைவுறு தமிழௌ வைக்கே
அதியனும் கனியை ஈந்தான்!

‘இருந்தமி ழாலி ருந்தேன்’
என்றனன் ஒருவன்; அந்தப்
பெருந்தமிழ் தன்னிற் குற்றம்
பிறங்கிடின் கோலால் குத்திச்
சிரங்குறு தலையன் ஆனான்
சீர்மிகு சாத்தன்; கம்பன்
அருந்தமிழ்க் கீந்து வள்ளல்
ஆனவன் சடையப் பன்காண்!

பழியினாற் பிறந்த போர்கள்
பாரினிற் பலவாம்; கூர்வேல்
விழியினால் விளைந்த போர்கள்
மிகப்பல; தொன்மை நாளாய்
அழிவினுக் கமைந்த போர்கள்
அளவிடற் கரிதால் தன்வாய்
மொழியினால் மூண்ட போரை
தடுத்தபேர் தமிழௌ வைக்கே!

வாடிய பயிரைக் கண்டு
வாடிடும் நெஞ்சம் உன்னால்
கூடிய தென்றால் உன்னை
குறைசொலத் துணிவா ருண்டோ?
தேடிய செல்வ மிங்கே
செந்தமிழ் மூன்று மானால்
நாடிய திசையி லெல்லாம்
நற்புகழ் பெருகு மன்றோ!

எழுதியவர் : அகரம் அமுதன் (1-Feb-14, 8:10 pm)
பார்வை : 201

மேலே